யோவான் 21:1-8

யோவான் 21:1-8 TCV

இதற்குப் பின்பு இயேசு மீண்டும் தமது சீடர்களுக்கு கலிலேயா கடல் அருகே காட்சியளித்தார். அது இவ்வாறு நடந்தது: சீமோன் பேதுருவும், திதிமு என்று அழைக்கப்பட்ட தோமாவும், கலிலேயாவிலுள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்யேலும், செபெதேயுவின் மகன்களும், வேறு இரண்டு சீடர்களும் கூடியிருந்தார்கள். சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்றான். மற்றவர்களும், “நாங்களும் உன்னுடன் வருகிறோம்” என்றார்கள். எனவே அவர்கள் புறப்பட்டு ஒரு படகில் ஏறிச்சென்றார்கள். ஆனால் அந்த முழு இரவும், அவர்கள் மீன்கள் எதையுமே பிடிக்கவில்லை. அதிகாலையிலே இயேசு கடற்கரையிலே நின்றார். ஆனால் சீடரோ, அவர் இயேசுவே என்று அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களைக் கூப்பிட்டு, “பிள்ளைகளே, உங்களுக்கு மீன் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார். அவர்கள், “இல்லை” என்றார்கள். “வலையைப் படகின் வலது புறமாக வீசுங்கள். அப்பொழுது உங்களுக்கு மீன்கள் அகப்படும்” என்றார். அவர்கள் அப்படி செய்தபோது, பெருந்திரளான மீன்கள் அகப்பட்டன. அதனால் அந்த வலையை அவர்களால் இழுத்தெடுக்க முடியவில்லை. அப்பொழுது இயேசுவுக்கு அன்பான சீடன், “அவர் கர்த்தர்” என்று பேதுருவிடம் கூறினான். அவர் கர்த்தர் என்று அவன் சொன்னதைச் சீமோன் பேதுரு கேட்டவுடனே, அவன், தான் மேலுடைகளின்றி நின்றதினால் இடையில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் குதித்தான். மற்றச் சீடரோ மீன்கள் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு படகிலே வந்தார்கள். ஏனெனில் அவர்கள் கரையிலிருந்து அதிக தூரத்தில் இருக்கவில்லை. அவர்கள் ஏறக்குறைய தொண்ணூறு மீட்டர் தூரத்திலேயே இருந்தார்கள்.