ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள். அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள்.
அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள். இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.
அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார்.
அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள்.
அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார்.
அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம்.
அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.
மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.
வாரத்தின் முதலாவது நாளாகிய அன்றே மாலைவேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார். அவர் இதைச் சொன்னபின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொல்லி, இயேசு அவர்கள்மேல் ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் யாருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.
இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை. எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!” என்றார்கள்.
ஆனால், தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றான்.