யோவான் 20:11-18

யோவான் 20:11-18 TCV

ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள். அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள். அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள். இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை. அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம். அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார். மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.