யோவான் 2:1, 3-12

யோவான் 2:3-12 TCV

திராட்சைரசம் தீர்ந்துபோனபோது, இயேசுவின் தாய் அவரிடத்தில், “திராட்சைரசம் தீர்ந்துவிட்டது” என்று சொன்னாள். அப்பொழுது இயேசு, அம்மா, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? “என் நேரம் இன்னும் வரவில்லையா?” என்றார். இயேசுவின் தாயோ வேலைக்காரரைப் பார்த்து, “அவர் உங்களுக்கு எதைச் சொல்கிறாரோ அதைச் செய்யுங்கள்” என்றாள். அவ்விடத்தின் அருகில், தண்ணீர் வைக்கும் ஆறு கற்சாடிகள் இருந்தன. இவ்விதமான கற்சாடிகளையே யூதர்கள் சடங்காச்சாரச் சுத்திகரிப்புக்கு உபயோகித்தார்கள். ஒவ்வொரு கற்சாடியும் இருபதிலிருந்து முப்பது குடங்கள்வரைத் தண்ணீர் கொள்ளும். இயேசு வேலைக்காரரிடம், “அந்தக் கற்சாடிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்றார்; அப்படியே அவர்கள் நிரம்பி வழியத்தக்கதாய் நிரப்பினார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “இதிலிருந்து மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடம் கொடுங்கள்” என்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள். பந்தி விசாரிப்புக்காரன், திராட்சை இரசமாய் மாறியிருந்த அந்தத் தண்ணீரை ருசித்துப் பார்த்தான். அது எங்கேயிருந்து வந்தது என்று அவனுக்குத் தெரியாதிருந்தது; ஆனால் தண்ணீரை நிரப்பிய வேலைக்காரருக்கே அது தெரிந்திருந்தது. அப்பொழுது பந்தி விசாரிப்புக்காரன் மணமகனை ஒரு பக்கமாய் கூட்டிக்கொண்டுபோய், அவனிடம், “சிறந்த திராட்சை இரசத்தையே எல்லோரும் முதலில் கொடுப்பார்கள். விருந்தாளிகள் நிறைய குடித்த பின்பே தரம் குறைந்த இரசத்தைக் கொடுப்பார்கள். ஆனால் நீரோ சிறந்த இரசத்தை இவ்வளவு நேரமாய் வைத்திருந்திருக்கிறீரே” என்றான். இதுவே இயேசு செய்த அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஆகும். அதை அவர் கலிலேயாவிலுள்ள கானாவிலே செய்தார். இவ்விதமாய் இயேசு தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். இதற்குப் பின்பு இயேசு தம்முடைய தாயோடும், சகோதரரோடும், தம்முடைய சீடரோடும் கப்பர்நகூமுக்குச் சென்றார். அங்கே அவர்கள் சிலநாட்கள் தங்கினார்கள்.