பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய் சவுக்கால் அடிக்கக் கட்டளையிட்டான். படைவீரர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தை செய்து, அதை அவர் தலையில் வைத்தார்கள். அவர்கள் அவருக்கு ஒரு கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்தி, “யூதரின் அரசனே வாழ்க!” என்று சொல்லி அவருடைய முகத்தில் அறைந்தார்கள்.
மீண்டும் ஒருமுறை பிலாத்து வெளியே வந்து யூதரிடம், “பாருங்கள், அவனுக்கு விரோதமாகக் குற்றம் சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீங்கள் அறியும்படி, நான் அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்றான். இயேசு முட்களால் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித்துக்கொண்டும், கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்திக்கொண்டும் வெளியே வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “இதோ அந்த மனிதன்!” என்றான்.
தலைமை ஆசாரியர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் அவரைக் கண்டபோது, “சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
அப்பொழுது பிலாத்து அவர்களிடம், “இவனை நீங்களே கொண்டுபோய் சிலுவையில் அறையுங்கள். ஆனால் நானோ இவனுக்கெதிராய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் ஒன்றையும் காணவில்லை” என்றான்.
அதற்கு யூதத்தலைவர்கள், “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னை இறைவனின் மகன் என்று சொல்கிறான்” என்றார்கள்.
பிலாத்து இதைக் கேட்டபோது, இன்னும் அதிகமாக பயந்தான். அவன் மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசுவோ பதில் ஏதும் சொல்லவில்லை. அதற்கு பிலாத்து, “நீ என்னுடன் பேசமறுக்கிறாயோ? உன்னை விடுவிக்கவும், உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று நீ அறியாதிருக்கிறாயோ?” என்றான்.
அதற்கு இயேசு, “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இராது. ஆனால், என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்றார்.
அப்பொழுதிலிருந்தே, பிலாத்து இயேசுவை விடுதலை செய்வதற்கு முயன்றான். ஆனால் யூதர்களோ, “நீர் இந்த மனிதனை விடுதலை செய்தால், நீர் ரோமப் பேரரசன் சீசருக்கு நண்பனல்ல. தன்னை ஒரு அரசன் என்று சொல்கிறவன், ரோமப் பேரரசனுக்கு எதிராய் எழும்புகிறான்” என்று சத்தமிட்டார்கள்.
பிலாத்து இதைக் கேட்டபோது, அவன் இயேசுவை வெளியே கொண்டுவந்து, தனது நீதிபதியின் இருக்கையில் உட்கார்ந்தான். அது கற்களால் செய்யப்பட்ட ஒரு தளமேடையில் இருந்தது. அந்த மேடை எபிரெய மொழியிலே கபத்தா என அழைக்கப்பட்டது. அன்று அது பஸ்கா என்ற பண்டிகை வாரத்தின் ஆயத்த நாளாயிருந்தது. நேரமோ பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது.
பிலாத்து யூதர்களிடம், “இதோ உங்கள் அரசன்” என்றான்.
ஆனால் அவர்களோ, “இவனை அகற்றும்! இவனை அகற்றும்! இவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
“உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமென்றா சொல்கிறீர்கள்?” என்று பிலாத்து கேட்டான்.
அதற்கு தலைமை ஆசாரியர்கள், “ரோமப் பேரரசன் சீசரைத் தவிர வேறு அரசன் எங்களுக்கு இல்லை” என்றார்கள்.
கடைசியாக, பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான்.
எனவே படைவீரர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு தம்முடைய சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு, மண்டையோடு என்ற இடத்திற்குச் சென்றார். அந்த இடம் எபிரெய மொழியில், கொல்கொதா என அழைக்கப்பட்டது. அங்கே அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவருடனேகூட வேறு இருவரை, அவருடைய இரு பக்கங்களிலும் அறைந்தார்கள். இயேசுவோ அவர்களுக்கு நடுவில் அறையப்பட்டார்.
பிலாத்து ஒரு அறிவிப்புப் பலகையைச் செய்து, அதைச் சிலுவையில் மாட்டினான். அதிலே, இப்படி எழுதப்பட்டிருந்தது:
நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, யூதரின் அரசன்.
யூதரில் அநேகர் இந்த அறிவிப்பை வாசித்தார்கள். ஏனெனில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகே இருந்தது. அந்த அறிவிப்பு எபிரெய, லத்தீன், கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. யூதரின் தலைமை ஆசாரியர்கள் பிலாத்துவிடம் போய், “யூதரின் அரசன் என்று எழுதவேண்டாம். இவன் தன்னை யூதரின் அரசன் என்று சொல்லிக்கொண்டான் என்று எழுதும்” என்றார்கள்.
அதற்கு பிலாத்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான்.
படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் அவருடைய உடைகளை எடுத்து, ஒவ்வொரு வீரனுக்கும் ஒவ்வொரு பங்காக, அதை நான்காகத் தங்களுக்குள்ளே பிரித்தெடுத்தார்கள். ஆனால் அவருடைய உள் உடை தைக்கப்படாமல் மேலிருந்து கீழ்வரை நெய்யப்பட்டதாயிருந்தது.
எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நாம் இதைக் கிழிக்கக் கூடாது. இது யாருக்குக் கிடைக்கும் என்று பார்ப்பதற்குச் சீட்டுப் போடுவோம்” என்றார்கள்.
“அவர்கள் என் உடைகளைத் தங்களுக்குள் பிரித்தெடுத்துக் கொண்டார்கள்,
எனது உடைக்காக சீட்டுப்போட்டார்கள்.”
என்ற வேதவசனம் நிறைவேறும்படி இது நடந்தது. இதையே அந்த படைவீரர்கள் செய்தார்கள்.
இயேசுவின் சிலுவை அருகே அவருடைய தாயும், தாயின் சகோதரியும், கிலேயோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றார்கள். தமது தாயும், தான் நேசித்த சீடனும் அருகே நிற்பதை இயேசு கண்டபோது, அங்கே அவர் தமது தாயிடம், “அம்மா, இதோ, உன் மகன்” என்றார். அந்தச் சீடனிடம், “இதோ உன் தாய்” என்றார். அந்த நேரத்திலிருந்து இந்தச் சீடன் மரியாளைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டான்.