அவ்வேளையில் பிரதான ஆசாரியன், இயேசுவின் சீடரைக் குறித்தும், அவருடைய போதனையைக் குறித்தும் விசாரித்தான்.
இயேசு அவனுக்கு சொன்னதாவது: “நான் உலகத்துடன் பகிரங்கமாகப் பேசினேன். யூதரெல்லோரும் கூடிவருகின்ற ஜெப ஆலயங்களிலும், எருசலேம் ஆலயத்திலும் எப்பொழுதும் போதித்தேன். நான் இரகசியமாக எதுவுமே சொல்லவில்லை. நீங்கள் ஏன் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்? நான் சொன்னவற்றைக் கேட்டவர்களிடம் விசாரியுங்கள். நான் என்ன சொன்னேன் என்பது நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும்.”
இயேசு இப்படியாக சொன்னபோது, அருகே நின்ற காவலரில் ஒருவன் அவருடைய முகத்திலே அறைந்தான். அவன், “பிரதான ஆசாரியனுக்கு இவ்விதமாகவா பதில் சொல்வது?” என்றான்.
அதற்கு இயேசு, “நான் எதையாவது தவறாகச் சொல்லியிருந்தால், தவறு என்னவென்று சொல். நான் பேசியது உண்மையானால், நீ ஏன் என்னை அடித்தாய்?” என்றார். அப்பொழுது அன்னா இயேசுவைக் கட்டப்பட்டவராகவே பிரதான ஆசாரியன் காய்பாவிடம் அனுப்பினான்.
சீமோன் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், ஒருவன் அவனிடம், “நீ அவனுடைய சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்று கேட்டான்.
“நான் அவருடைய சீடன் அல்ல” என்று பேதுரு மறுதலித்தான்.
பேதுருவினால் காது வெட்டப்பட்டவனின் உறவினராகிய ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனாயிருந்தான். அவன் பேதுருவிடம், “நீ இயேசுவுடனே அந்த ஒலிவ தோட்டத்தில் இருந்ததை நான் கண்டேனே” என்றான். அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான். உடனே சேவல் கூவிற்று.
பின்பு இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநனரின் அரண்மனைக்குக் கொண்டுசென்றார்கள். இதற்குள்ளாகப் பொழுது விடிந்து விட்டது. பஸ்காவைச் சாப்பிடத்தக்க நிலையில் தங்களை வைத்துக்கொள்ள அவர்கள் விரும்பி, அசுத்தப்படாமல் காத்துக்கொள்ளும்படி யூதர்கள் அந்த அரண்மனைக்குள் போகவில்லை. எனவே பிலாத்து வெளியே யூதத்தலைவர்களிடம் வந்து, “இந்த மனிதனுக்கு விரோதமாய் என்ன குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “இவன் குற்றவாளியாய் இல்லாதிருந்தால், நாங்கள் இவனை உம்மிடம் ஒப்படைத்திருக்க மாட்டோம்” என்றார்கள்.
அப்பொழுது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் உங்கள் மோசேயின் சட்டத்தின்படி இவனுக்கு நியாயத்தீர்ப்பு வழங்குங்கள்” என்றான்.
அதற்கு அவர்கள், “யாருக்கும் மரண தண்டனை வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்றார்கள். தமக்கு எவ்விதமான மரணம் ஏற்படப்போகிறது என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தது.
பின்பு பிலாத்து அரண்மனைக்குள்ளே போய், இயேசுவைத் தன்னிடம் கொண்டுவரும்படிச்செய்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “இதை நீராகவே கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் உம்மிடம் என்னைக்குறித்து இப்படிச் சொன்னார்களா?” என்று கேட்டார்.
அப்பொழுது பிலாத்து, “நான் என்ன ஒரு யூதனா? உனது மக்களும் உனது தலைமை ஆசாரியர்களுமே உன்னை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நீ செய்தது என்ன?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நான் இந்த உலகத்துக்குரிய அரசன் அல்ல. அப்படியிருந்தால், யூதர்களிடம் நான் ஒப்புக்கொடுக்கப்படுவதைத் தடுக்கும்படி எனது ஊழியக்காரர்களே போராடியிருப்பார்கள். எனது அரசோ வேறு இடத்தைச் சேர்ந்தது” என்றார்.
அதற்கு பிலாத்து, “அப்படியானால், நீ ஒரு அரசன்தானே!” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நான் ஒரு அரசன் என்று நீர் சொல்வது சரிதான். ஏனெனில் சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கும்படியே நான் பிறந்தேன். அதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். சத்தியத்திற்கு உரியவர்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செவிகொடுக்கிறார்கள்” என்றார்.
அதற்கு பிலாத்து, “சத்தியம் என்றால் என்ன?” என்று கேட்டான். அப்படிக் கேட்ட அவன் மீண்டும் வெளியே போய் யூதரிடம், “நான் இவனுக்கு எதிராய் குற்றம் சாட்டுவதற்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை. ஆகவே பஸ்கா என்ற பண்டிகை காலத்தில் ஒரு கைதியை நான் உங்களுக்காக விடுதலை செய்வது வழக்கமல்லவா? எனவே ‘யூதரின் அரசனை’ நான் விடுதலைசெய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்களோ, “இல்லை, அவனை அல்ல! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். அந்த பரபாஸ் என்பவனோ ஒரு கலவரத்தில் ஈடுபட்டவனாய் இருந்தான்.