பிதா எல்லாவற்றையும் தமது வல்லமையின்கீழ் ஒப்புக்கொடுத்திருந்ததையும், தான் இறைவனிடத்திலிருந்து வந்ததையும், இறைவனிடத்திற்கே திரும்பிப் போகிறதையும் இயேசு அறிந்திருந்தார். எனவே அவர் உணவுப் பந்தியிலிருந்து எழுந்து தமது மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு சால்வையை எடுத்து இடுப்பிலேக் கட்டிக் கொண்டார். அதற்குப் பின்பு, அவர் ஒரு பாத்திரத்திலே தண்ணீரை ஊற்றி, தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவினார். பின் தம்முடைய இடுப்பிலே கட்டியிருந்தச் சால்வையினால் அவர்களுடைய கால்களைத் துடைக்கத் தொடங்கினார்.
இயேசு சீமோன் பேதுருவிடம் வந்தபோது, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா?” என்றான்.
இயேசு அதற்குப் பதிலாக, “நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது புரியாது, பின்பு நீ புரிந்துகொள்வாய்” என்றார்.
அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான்.
அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார்.
அப்பொழுது சீமோன் பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களை மாத்திரமல்ல, என்னுடைய கைகளையும் என்னுடைய தலையையுங்கூட கழுவும்!” என்றான்.
அதற்கு இயேசுவோ, “குளித்தவன் தன் கால்களை மாத்திரமே கழுவ வேண்டியவனாயிருக்கிறான்; மற்றப்படி அவனுடைய முழு உடலும் சுத்தமாயிருக்கிறது. நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் அல்ல” என்றார். ஏனெனில் தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யார் என்று அவர் அறிந்திருந்தார். அதனாலேயே, “நீங்கள் எல்லோரும் சுத்தமானவர்கள் அல்ல” என்று சொன்னார்.
அவர்களுடைய கால்களைக் கழுவி முடித்தபின்பு, இயேசு தம்முடைய உடையை உடுத்தி கொண்டு, மீண்டும் தமக்குரிய இடத்தில் உட்கார்ந்தார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா?” என்று கேட்டார். மேலும் அவர், “நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும், ‘கர்த்தர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அப்படி அழைப்பது சரியே. ஏனெனில் நான் அவர்தான். அப்படியே கர்த்தரும் போதகருமாயிருக்கிற நானே உங்கள் கால்களைக் கழுவியிருக்கிறேன். நீங்களும்கூட ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவவேண்டும். ஏனெனில் நான் உங்களுக்குச் செய்ததுபோலவே, நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்திருக்கிறேன்.