யோவான் 11:18-46

யோவான் 11:18-46 TCV

பெத்தானியா எருசலேமில் இருந்து இரண்டு மைல்களுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது. இறந்துபோன அவர்களுடைய சகோதரனின் நிமித்தம், மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்வதற்கு அநேக யூதர்கள் அங்கே வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திப்பதற்கு அவள் புறப்பட்டுப் போனாள். ஆனால் மரியாளோ வீட்டிலேயே இருந்துவிட்டாள். மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், எனது சகோதரன் மரித்திருக்கமாட்டான். இப்பொழுதும்கூட நீர் கேட்பது எதுவோ அதை இறைவன் உமக்குக் கொடுப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்றாள். அப்பொழுது இயேசு அவளைப் பார்த்து, “உன்னுடைய சகோதரன் மீண்டும் உயிருடன் எழுந்திருப்பான்” என்றார். அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் நடைபெறும் உயிர்த்தெழுதலில் அவன் உயிரோடு எழுந்திருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “உயிரும், உயிர்த்தெழுதலும் நானே. என்னில் விசுவாசமாயிருக்கிறவன், மரித்தாலும் உயிர்வாழ்வான். உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் ஒருநாளும் மரிக்கமாட்டான். நீ இதை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் இறைவனின் மகன், உலகத்திற்கு வருகிற கிறிஸ்து. நான் இதை விசுவாசிக்கிறேன்” என்றாள். அவள் இதைச் சொன்னபின்பு திரும்பிப்போய். தன்னுடைய சகோதரி மரியாளை இரகசியமாகக் கூட்டிக்கொண்டுபோய், “போதகர் வந்து இருக்கிறார். அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றாள். மரியாள் இதைக் கேட்டபோது, விரைவாய் எழுந்து அவரிடம் போனாள். இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், தான் மார்த்தாளைச் சந்தித்த இடத்திலேயே இருந்தார். வீட்டிலே மரியாளுடன் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறிய யூதர்கள், அவள் விரைவாய் எழுந்து புறப்பட்டுப் போகிறதைக் கண்டபோது, அவர்களும் அவள் பின்னே சென்றார்கள். அவள் அழுவதற்காக கல்லறைக்குப் போகிறாள் என்றே அவர்கள் நினைத்தார்கள். இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் போய்ச் சேர்ந்தபோது, அவள் அவரைக்கண்டு, அவருடைய பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என்னுடைய சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்றாள். அவள் அழுவதையும், அவளுடன் வந்திருந்த யூதர்கள் அழுவதையும் இயேசு கண்டபோது, அவர் ஆவியில் கலங்கி, துயரமடைந்து, “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவரே வாரும், வந்துபாரும்” என்றார்கள். இயேசு கண்ணீர்விட்டார். அதைக்கண்ட யூதர்கள், “பாருங்கள், இவர் லாசருமீது எவ்வளவு அன்பாயிருந்தார்!” என்றார்கள். ஆனால் அவர்களில் சிலரோ, “பார்வையற்றவனுடைய கண்களைத் திறந்த இவர், அவனைச் சாகாமல் காத்திருக்கலாமே?” என்றார்கள். இயேசு மீண்டும் துயரமுடையவராய் கல்லறைக்கு வந்தார். அது ஒரு குகையாய் இருந்தது. அதன் வாசலிலே ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு அங்கு நின்றவர்களைப் பார்த்து, “அந்தக் கல்லை அகற்றுங்கள்” என்றார். அப்பொழுது இறந்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள், “ஆண்டவரே, இப்பொழுது அது நாற்றம் வீசுமே. அங்கே, அவனை வைத்து நான்கு நாட்கள் ஆயிற்றே” என்றாள். அப்பொழுது இயேசு, “நீ விசுவாசித்தால், இறைவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டார். எனவே அவர்கள் அந்தக் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணார்ந்து பார்த்து, “பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்துக் கேட்டபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் எப்பொழுதும் எனக்கு செவிகொடுக்கிறீர் என்பதை நான் அறிவேன். ஆனால் இங்கு நிற்கிற மக்கள் நீரே என்னை அனுப்பினீர் என்று விசுவாசிக்கும்படி இதைச் சொன்னேன்” என்றார். இயேசு இதைச் சொன்னபின்பு, அவனை உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா!” என்று கூப்பிட்டார். மரித்துபோனவன் வெளியே வந்தான். அவனுடைய கைகளும் கால்களும் மென்பட்டு துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. அவனுடைய முகத்தைச் சுற்றியும் ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து, “பிரேதத் துணிகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்றார். மரியாளைச் சந்திக்க வந்திருந்த பல யூதர்கள் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசம் வைத்தார்கள். ஆனால் அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்ததைக் குறித்துச் சொன்னார்கள்.