எரேமியா 7:1-15

எரேமியா 7:1-15 TCV

யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே: “நீ யெகோவாவின் ஆலய வாசலில் நின்று இச்செய்தியைப் பிரசித்தப்படுத்து: “ ‘யெகோவாவை வழிபட இந்த வாசல்களின் வழியாக வருகிற யூதா நாட்டு மக்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்திருத்துங்கள். அப்பொழுது நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். ஏமாற்றும் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, “இதுவே யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம்!” என்று சொல்லாதிருங்கள். நீங்கள் உண்மையாக உங்கள் வழிகளையும், செயல்களையும் மாற்றி, ஒருவரோடொருவர் நீதியாய் நடவுங்கள், அந்நியரையும், தந்தையற்றவர்களையும், விதவைகளையும் ஒடுக்கவேண்டாம். இந்த இடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும், வேறு தெய்வங்களைப் பின்பற்றி உங்களுக்கே தீங்கை உண்டாக்காமலும் இருங்கள். அப்படி இருப்பீர்களானால், உங்கள் முற்பிதாக்களுக்கு என்றென்றைக்குமாக நான் கொடுத்த இந்த நாட்டிலுள்ள, இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்க வைப்பேன். ஆனால் பாருங்கள், நீங்கள் பயனற்ற ஏமாற்று வார்த்தைகளையே நம்புகிறீர்கள். “ ‘நீங்கள் திருடுகிறீர்கள், கொலைசெய்கிறீர்கள், விபசாரம் செய்கிறீர்கள், பொய் சத்தியம் பண்ணுகிறீர்கள், பாகாலுக்குத் தூபங்காட்டுகிறீர்கள், நீங்கள் அறியாத வேறு தெய்வங்களைப் பின்பற்றுகிறீர்கள். பின்பு என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கு முன்பாக வந்துநின்று, “நாங்கள் பாதுகாப்பாயிருக்கிறோம்” என்கிறீர்கள். இந்த எல்லா அருவருப்புகளையும் செய்வதற்காகவா நீங்கள் பாதுகாக்கப்பட்டீர்கள்? என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயம் உங்களுக்கு கள்ளர் குகையானதோ? ஆனால் நான் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கிறேன்! என்று யெகோவா அறிவிக்கிறார். “ ‘இப்பொழுது சீலோவில் உள்ள இடத்திற்கு போங்கள். அதையே என் பெயருக்குரிய இருப்பிடமாக முதன்முதலில் ஏற்படுத்தினேன். அங்கே என் மக்களாகிய இஸ்ரயேலருடைய கொடுமையினிமித்தம், அதற்கு நான் என்ன செய்தேன் என்று பாருங்கள். நீங்கள் இந்தச் செயல்களை எல்லாம் செய்து கொண்டிருக்கும்போது, நான் திரும்பத்திரும்ப உங்களுடன் பேசினேன், ஆனால் நீங்கள் கேட்கவில்லை; நான் உங்களைக் கூப்பிட்டேன், நீங்களோ பதில் தரவில்லை என்று யெகோவா அறிவிக்கிறார். ஆகையால் அன்று நான் சீலோவுக்குச் செய்ததையே, என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கும் செய்வேன். உங்களுக்கும் உங்கள் தந்தையருக்கும் நான் கொடுத்த இடமான, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள இந்த ஆலயத்துக்கே இப்படிச் செய்வேன். எப்பிராயீம் மக்களான உங்கள் சகோதரருக்குச் செய்ததுபோல, நான் உங்களை என் முகத்திற்கு முன்னிருந்து தள்ளிவிடுவேன்.’