எரேமியா 25:15-38

எரேமியா 25:15-38 TCV

மேலும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா என்னிடம் சொன்னது இதுவே: “என்னுடைய கடுங்கோபமாகிய திராட்சரசம் நிரம்பிய பாத்திரத்தை, நீ என் கையிலிருந்து எடுத்து, நான் உன்னை அனுப்பும் இடங்களிலுள்ள எல்லா நாடுகளையும் அதைக் குடிக்கும்படி செய். அதை அவர்கள் குடிக்கும்போது, நான் அவர்கள் மத்தியில் அனுப்பும் வாளின் நிமித்தம் அவர்கள் தள்ளாடி பைத்தியமாய்ப் போவார்கள்” என்றார். அப்பொழுது யெகோவாவின் கையிலிருந்து நான் அந்தப் பாத்திரத்தை எடுத்து, யெகோவா என்னை அனுப்பிய எல்லா இடங்களிலுள்ள நாடுகளையும் அதைக் குடிக்கும்படி செய்தேன். எருசலேமுக்கும், யூதாவின் பட்டணங்களுக்கும், அதன் அரசர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன். இன்று அவர்கள் இருக்கிறது போலவே அவர்களைப் பாழாக்கவும், வெறுப்புக்கும், பழிப்புக்கும், சாபத்திற்கும் உள்ளாக்கவுமே இப்படிக் குடிக்கக் கொடுத்தேன். எகிப்தின் அரசன் பார்வோனையும், அவனுடைய உதவியாளரையும், அவனுடைய அதிகாரிகளையும், அவனுடைய எல்லா மக்களையும் அங்குள்ள எல்லா அந்நிய மக்களையும், ஊத்ஸ் நாட்டின் எல்லா அரசர்களையும், அஸ்கலோன், காசா, எக்ரோன் ஆகிய பெலிஸ்திய அரசர்கள் அனைவரையும் அஸ்தோத்தில் மீந்திருப்பவர்களையும் குடிக்கப்பண்ணினேன். மேலும் ஏதோம், மோவாப், அம்மோன் ஆகியோரையும், தீருவிலும் சீதோனிலும் இருக்கும் எல்லா அரசர்களையும் கடலுக்கு அப்பால் உள்ள கரையோர நாடுகளின் அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன். தேதானையும், தேமாவையும், பூஸையும் தூர இடங்களிலுள்ள எல்லோரையும், அரேபியா நாட்டு எல்லா அரசர்களையும், பாலைவனத்தில் வசிக்கும் அந்நிய நாட்டு மக்களின் எல்லா அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன். சிம்ரி, ஏலாம், மேதியா நாடுகளிலுள்ள அரசர்களையும், வடக்கிலும், அருகேயும், தூரமாயும் இருக்கும் எல்லா அரசர்களையும், பூமியிலுள்ள எல்லா அரசுகளையும் ஒன்றன்பின் ஒன்றாகக் குடிக்கப்பண்ணினேன். இவர்கள் எல்லோரும் குடித்த பின்பு, சேசாக்கு அரசனும் குடிப்பான். “மேலும் அவர்களிடம், ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: குடியுங்கள், வெறித்து வாந்தி பண்ணுங்கள். நான் உங்களுக்குள் அனுப்பப்போகிற வாளின் நிமித்தம் எழும்பாதபடிக்கு விழுங்கள்.’ ஆனால், அவர்கள் உன் கையிலிருந்து பாத்திரத்தை எடுத்துக் குடிக்க மறுத்தால், நீ அவர்களிடம், ‘நீங்கள் அதைக் குடிக்கவே வேண்டும் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார் என்று சொல். ஏனெனில், பாருங்கள், என் பெயரைக்கொண்ட பட்டணத்தின்மேல் என் அழிவைக் கொண்டுவர ஆரம்பிக்கிறேன். நீங்கள் மாத்திரம் தண்டிக்கப்படாமல் விடப்படுவீர்களோ? நீங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படமாட்டீர்கள். நான் பூமியில் வாழும் எல்லாக் குடிகளின்மேலும் வாளை வரப்பண்ணப் போகிறேன் என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்’ என்று சொல் என்றார். “இந்த வார்த்தைகளை எல்லாம் நீ அவர்களுக்கு விரோதமாக இறைவாக்காகச் சொல்: “ ‘உயரத்திலிருந்து யெகோவா சத்தமிட்டு, தமது பரிசுத்த இடத்திலிருந்து முழங்குவார். தன் நாட்டுக்கு எதிராகப் பலமாய் சத்தமிட்டு, திராட்சைப் பழங்களை மிதிக்கிறவர்களின் சத்தத்தைப்போல், பூமியில் வசிக்கும் எல்லோருக்கெதிராகவும் அவர் ஆர்ப்பரிப்பார். நாடுகளுக்கு விரோதமாகவும் யெகோவா குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருவதால், பூமியின் கடைசிவரை கொந்தளிப்பு எதிரொலிக்கும். அவர் எல்லா மனுக்குலத்தின்மீதும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார். கொடியவர்களையோ வாளுக்கு ஒப்புக்கொடுப்பார்’ ” என்று யெகோவா அறிவிக்கிறார். சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “பார்! நாட்டிலிருந்து நாட்டுக்கு பேராபத்து பரவுகிறது, பூமியின் கடைசி எல்லையிலிருந்து ஒரு பலத்த புயல் எழும்புகிறது.” அக்காலத்தில் யெகோவாவினால் கொலையுண்டவர்கள் பூமியின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை எங்கும் சிதறுண்டு கிடப்பார்கள். அவர்களுக்காக யாரும் புலம்பமாட்டார்கள். அவர்கள் ஒன்றுசேர்த்து புதைக்கப்படவும் மாட்டார்கள். நிலத்தின்மேல் குப்பையைப்போல் கிடப்பார்கள். மேய்ப்பர்களே, அழுது புலம்புங்கள். மந்தையின் தலைவர்களே! புழுதியில் புரளுங்கள். நீங்கள் கொல்லப்படும் காலம் வந்துவிட்டது. மிக மெல்லிய மண்பாத்திரத்தைப்போல் நீங்கள் விழுந்து நொறுங்குவீர்கள். மேய்ப்பர்கள் ஓடுவதற்கு இடமிருக்காது. மந்தையின் தலைவர்கள் தப்புவதற்கும் இடமிருக்காது. மேய்ப்பர்களின் அழுகையைக் கேளுங்கள்; மந்தையின் தலைவர்களின் புலம்பலைக் கேளுங்கள். யெகோவா அவர்களுடைய மேய்ச்சல் இடத்தை அழிக்கிறார். யெகோவாவின் பயங்கரமான கோபத்தினால் அமைதி நிறைந்த பசும்புல்வெளிகள் பாழாய் விடப்படும். பதுங்குமிடத்தைவிட்டு இரைதேடப் புறப்படும் சிங்கத்தைப்போல் அவர் புறப்படுவார். அவர்களுடைய நாடு பாழாக்கப்படும். ஒடுக்குகிறவனுடைய வாளினாலும், யெகோவாவின் பயங்கரமான கோபத்தினாலும் இப்படியாகும்.