நியாயாதிபதிகள் 7:8-15

நியாயாதிபதிகள் 7:8-15 TCV

எனவே கிதியோனும், முந்நூறுபேரும் உணவுப் பொருட்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு, எஞ்சியிருந்த இஸ்ரயேலரை அவர்களுடைய கூடாரத்திற்கு அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது மீதியானியரின் முகாம் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது. அதே இரவில் யெகோவா கிதியோனிடம், “இப்பொழுதே நீ எழுந்து அவர்களுடைய முகாமிற்கு எதிராக போ, ஏனெனில் நான் அதை உன் கையில் கொடுக்கப்போகிறேன். தாக்குவதற்கு நீ பயந்தால், உனது பணியாளான பூராவுடன் மீதியானியரின் முகாமுக்குப்போ. அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நீ கேள். அதற்குப்பின் அந்த முகாமைத் தாக்குவதற்கு நீ துணிவுகொள்வாய்” என்றார். அவ்வாறே அவனும் அவன் பணியாளன் பூராவும் முகாமின் காவல் அரண் இருக்கும் இடம்வரைக்கும் போனார்கள். அந்தப் பள்ளத்தாக்கிலே மீதியானியர், அமலேக்கியர், கிழக்கு நாட்டு மக்கள் எல்லோரும் வெட்டுக்கிளிக் கூட்டம்போல தங்கியிருந்தனர். அவர்களுடைய ஒட்டகங்கள் கணக்கிடமுடியாத கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தன. கிதியோன் முகாமை வந்துசேர்கையில் ஒருவன் தான் கண்ட கனவை தன் சிநேகிதனிடம் சொல்லிக்கொண்டிருந்தான். “நான் ஒரு கனவு கண்டேன்; கனவில் சுடப்பட்ட ஒரு வட்டமான வாற்கோதுமை அப்பம் உருண்டு மீதியானியரின் முகாமின்மேல் வந்தது. அது மிகவும் வல்லமையுடன் வந்து கூடாரத்தைத் தாக்கியபோது கூடாரம் மறுபக்கமாக புரட்டி வீழ்த்தப்பட்டது,” எனச் சொன்னான். அப்பொழுது அவனுடைய சிநேகிதன், “இது இஸ்ரயேலனான யோவாசின் மகன் கிதியோனின் வாளேயல்லாமல் வேறொன்றுமல்ல. இறைவன் மீதியானியரையும், இந்த முகாம் முழுவதையுமே அவனுடைய கைகளில் ஒப்படைத்திருக்கிறார்” என்று சொன்னான். கிதியோன் இந்த கனவையும் அதன் விளக்கத்தையும் கேட்டபோது, இறைவனை வழிபட்டான். அவன் இஸ்ரயேலரின் முகாமுக்குள் திரும்பிப்போய், “எழும்புங்கள், யெகோவா மீதியானியருடைய முகாமை உங்கள் கைகளில் கொடுத்திருக்கிறார்” என்று கூப்பிட்டுச் சொன்னான்.