நியாயாதிபதிகள் 7:1-9

நியாயாதிபதிகள் 7:1-9 TCV

அதிகாலையில் கிதியோன் என்னும் யெருபாகாலும் அவனுடைய எல்லா மக்களும் ஆரோத் என்னும் நீரூற்றின் அருகில் முகாமிட்டார்கள். மீதியானியரின் முகாமோ இவர்களுக்கு வடக்கே, மோரே மலைக்கு அருகே பள்ளத்தாக்கில் இருந்தது. யெகோவா கிதியோனிடம், “நான் மீதியானியரை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு நீ அளவுக்கதிகமானவர்களை வைத்திருக்கிறாய். நாங்கள் எங்கள் பெலத்தில் எங்களை மீட்டுக்கொண்டோம் என்று இஸ்ரயேலர் எனக்கெதிராக பெருமைபாராட்டக் கூடுமே. ஆகையால் நீ மக்களுக்கு, ‘உங்களுக்குள் பயத்தினால் நடுங்குபவர்கள் இருந்தால் கீலேயாத் மலையை விட்டுப் போய்விடலாம்’ என்று அறிவி” என்றார். எனவே இருபத்து இரண்டாயிரம்பேர் கீலியாத் மலையை விட்டுப் போனார்கள். பத்தாயிரம் பேர் மட்டும் எஞ்சியிருந்தார்கள். தொடர்ந்து யெகோவா கிதியோனிடம், “மனிதர் இன்னும் அளவுக்கதிகமாயிருக்கிறார்கள். அவர்களை தண்ணீர் அருகே கொண்டுபோ; நான் அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; நான் ஒருவனை, ‘இவன் உன்னுடன் வரலாம்’ என்றால் அவன் உன்னுடன் வரட்டும். நான் ஒருவனை, ‘இவன் உன்னுடன் வரக்கூடாது’ என்றால் அவன் வரக்கூடாது” என்றார். எனவே கிதியோன் அந்த மனிதரைத் தண்ணீர் அருகே அழைத்துச் சென்றான். அப்பொழுது யெகோவா அவனிடம், “நாக்கால் நக்கி நாயைப்போல் தண்ணீர் குடிப்போரை ஒரு பக்கமும், முழங்கால்களை ஊன்றி தண்ணீர் குடிப்போரை மற்ற பக்கமுமாக நிறுத்திவை” என்றார். அவ்வாறு தண்ணீரை தங்கள் கைகளால் அள்ளி நாயைப்போல நாக்கால் நக்கி குடித்தவர்கள் முந்நூறுபேர். எஞ்சியோர் தங்கள் முழங்கால்களை ஊன்றி வாயைத் தண்ணீரில் வைத்துக் குடித்தனர். யெகோவா கிதியோனிடம், “நக்கிக் குடித்த முந்நூறுபேருடனே நான் உங்களை மீட்டு மீதியானியரை உங்கள் கையில் தருவேன். மற்றெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகட்டும்” என்றார். எனவே கிதியோனும், முந்நூறுபேரும் உணவுப் பொருட்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு, எஞ்சியிருந்த இஸ்ரயேலரை அவர்களுடைய கூடாரத்திற்கு அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது மீதியானியரின் முகாம் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது. அதே இரவில் யெகோவா கிதியோனிடம், “இப்பொழுதே நீ எழுந்து அவர்களுடைய முகாமிற்கு எதிராக போ, ஏனெனில் நான் அதை உன் கையில் கொடுக்கப்போகிறேன்.