ஏசாயா 6:1-8

ஏசாயா 6:1-8 TCV

உசியா அரசன் இறந்த வருடத்தில், யெகோவா உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அவருடைய நீண்டிருந்த மேலுடை ஆலயத்தை நிரப்பியிருந்தது. அவருக்கு மேலாக சேராபீன்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவை இரு சிறகுகளால் தங்கள் முகங்களை மூடிக்கொண்டும், இரு சிறகுகளால் தங்கள் பாதங்களை மூடிக்கொண்டும், இரு சிறகுகளால் பறந்துகொண்டும் இருந்தன. அவை ஒன்றையொன்று அழைத்து இவ்வாறு கூறியது: “எல்லாம் வல்ல யெகோவா, பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமி முழுவதும் அவரது மகிமையால் நிறைந்திருக்கிறது.” அவைகளுடைய குரல்களின் சத்தத்தினால் ஆலயக் கதவு நிலைகளும், வாசற்படிகளும் அதிர்ந்தன, ஆலயம் புகையினாலும் நிரம்பியது. அப்பொழுது நான், “எனக்கு ஐயோ, நான் அழிந்தேன்! நானோ அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகள் உள்ள மக்கள் மத்தியில் வாழ்கிறேன். என் கண்கள், எல்லாம் வல்ல யெகோவாவாகிய அரசரைக் கண்டுவிட்டனவே” என்று சொன்னேன். அப்பொழுது சேராபீன்களுள் ஒருவன், பலிபீடத்திலிருந்து எரியும் நெருப்புத் தணலொன்றைக் குறட்டினால் எடுத்து, அதைத் தன் கையில் பிடித்துக்கொண்டு என்னிடம் பறந்து வந்தான். அவன் எனது வாயை அதனால் தொட்டு, “பார், இது உனது உதடுகளைத் தொட்டுள்ளது; உனது குற்றம் நீங்கி, உனது பாவம் நிவிர்த்தியாக்கப்பட்டது” என்றான். பின்பு நான், யெகோவாவின் குரலைக் கேட்டேன், அவர், “யாரை நான் அனுப்புவேன்? யார் நமக்காகப் போவான்?” என்றார். அதற்கு நான், “இதோ, நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்!” என்றேன்.