ஏசாயா 48:12-22

ஏசாயா 48:12-22 TCV

“யாக்கோபே, நான் அழைத்த இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு, நானே அவர்; ஆரம்பமும் முடிவும் நானே. என் சொந்தக் கரமே பூமியின் அஸ்திபாரங்களை அமைத்தது; என் வலதுகரம் வானங்களை விரித்தது; நான் அவைகளை அழைப்பிக்கின்றபோது, அவை ஒன்றாய் எழுந்து நிற்கும். “நீங்கள் எல்லோரும் ஒன்றாய் கூடிவந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்: உங்கள் விக்கிரகங்களில் எது இந்தக் காரியங்களை முன்னறிவித்தது? யெகோவாவுக்குப் பிரியமானவன் அவருடைய நோக்கத்தை, பாபிலோனுக்கு விரோதமாக நிறைவேற்றுவான்; அவனுடைய கை பாபிலோனியர்களுக்கு விரோதமானதாகவே இருக்கும். நான், நானே பேசினேன்; மெய்யாகவே நான் அவனை அழைத்தேன். நான் அவனைக் கொண்டுவருவேன், அவன் தன்னுடைய பணியில் வெற்றிபெறுவான். “நீங்கள் என் அருகே வந்து இதைக் கேளுங்கள்: “முதல் அறிவிப்பிலிருந்தே நான் இரகசியமாய்ப் பேசவில்லை; அது நடைபெற்ற காலத்தில் நான் அங்கு இருக்கிறேன்.” இப்பொழுது ஆண்டவராகிய யெகோவா தமது ஆவியானவருடன் என்னை அனுப்பியிருக்கிறார். யெகோவா சொல்வது இதுவே, இஸ்ரயேலரின் பரிசுத்தராகிய உங்கள் மீட்பர் சொல்கிறதாவது: “உங்கள் இறைவனாகிய யெகோவா நானே, மிக நன்மையானவற்றை உங்களுக்குக் போதிக்கிறவர் நானல்லவா? நீங்கள் போகவேண்டிய பாதையில் உங்களை வழிநடத்துகிறவர் நானல்லவா? என்னுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால், உங்களுடைய சமாதானம் நதியைப்போல் இருந்திருக்கும்; உங்களுடைய நீதி கடலின் அலைகளைப்போல இருந்திருக்கும். உங்கள் சந்ததிகள் மணலைப்போல் இருந்திருப்பார்கள்; உங்களுடைய பிள்ளைகள் அந்த மணலின் எண்ணற்ற துகள்களைப்போல இருந்திருப்பார்கள்; அவர்களுடைய பெயர்கள் என் முன்னிலையில் இருந்து நீங்காமலும், அழிக்கப்படாமலும் இருந்திருக்கும்.” பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள், பாபிலோனியர்களை விட்டுத் தப்பியோடுங்கள்! ஆனந்த சத்தமிட்டு அதை அறிவித்துப் பிரசித்தப்படுத்துங்கள்! யெகோவா தனது பணியாளன் யாக்கோபை மீட்டிருக்கிறார் என்று சொல்லி, அந்தச் செய்தியைப் பூமியின் கடைசி எல்லைவரை அனுப்புங்கள்; அவர் அவர்களை பாலைவனத்தின் வழியாக வழிநடத்தியபோது, அவர்கள் தாகமடையவில்லை; அவர் அவர்களுக்காக கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்தார். அவர் பாறையைப் பிளந்தார், தண்ணீர் பொங்கி வழிந்தது. “கொடுமையானவர்களுக்கு சமாதானம் இல்லை” என்று யெகோவா சொல்கிறார்.