ஏசாயா 42:1-7

ஏசாயா 42:1-7 TCV

“இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர், என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்; இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன், அவர் நாடுகளுக்கு நீதியை வழங்குவார். அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார். அவர் வீதிகளில் உரத்த குரலில் பேசவுமாட்டார். அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்; அவர் உண்மையில் நீதியை வெளிப்படுத்தி, அதை நிலைநாட்டுவார். பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை தயங்கவுமாட்டார் தளரவுமாட்டார். தீவுகள் அவரது வேதத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்.” யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது: அவரே வானங்களைப் படைத்து அவைகளை விரித்து வைத்தார், அவரே பூமியையும், அதிலிருந்து வரும் அனைத்தையும் பரப்பினார். அவரே அதில் உள்ள மக்களுக்கு சுவாசத்தைக் கொடுத்தார். அதில் நடமாடுபவர்களுக்கு உயிரைக் கொடுத்தார். அவர் சொல்வது இதுவே: “யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து, நான் உனது கையைப் பிடித்து, நான் உன்னைக் காத்து, நீர் மக்களுக்கு ஒரு உடன்படிக்கையாகவும், பிற நாட்டவர்களுக்கு ஒரு ஒளியாகவும் இருக்கும்படி உம்மை ஏற்படுத்துவேன். குருடரின் கண்களைத் திறக்கவும், சிறையிலுள்ளவர்களை விடுதலையாக்கவும், இருட்டறையிலிருந்து விடுவிக்கவுமே இவ்வாறு செய்வேன்.