ஏசாயா 26:1-13

ஏசாயா 26:1-13 TCV

அந்த நாளிலே யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்: நமக்கொரு பலமுள்ள பட்டணம் உண்டு; இறைவன் இரட்சிப்பை, அதன் மதில்களாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறார். வாசல்களைத் திறவுங்கள், நீதியுள்ள நாடு உள்ளே வரட்டும், நேர்மையான நாடு உள்ளே வரட்டும். மனவுறுதியுடன் இருப்பவனை நீர் முழுநிறைவான சமாதானத்துடன் வைத்திருப்பீர்; ஏனெனில் அவன் உம்மிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான். யெகோவாவிடம் என்றென்றும் நம்பிக்கையை வையுங்கள்; ஏனெனில், யெகோவா, யெகோவாவே நித்திய கற்பாறை. உயர்வாக வாழ்வோரை அவர் தாழ்த்துகிறார்; உயர்த்தப்பட்ட பட்டணத்தை கீழே தள்ளி வீழ்த்துகிறார், அதைத் தரைமட்டமாக்கிப் புழுதியாக்குகிறார். கால்கள் அதை மிதிக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் பாதங்களும், ஏழைகளின் காலடிகளுமே அதை மிதிக்கின்றன. நீதியானவர்களின் பாதை நேர்சீரானது; நீதியாளரே, நீரே நீதியானவர்களின் வழியைச் சீர்படுத்துகிறீர். ஆம், யெகோவாவே, உமது சட்டங்களின் வழியில் நடந்து, உமக்குக் காத்திருக்கிறோம்; உமது பெயரும் உமது புகழுமே எங்கள் இருதயங்களின் வாஞ்சையாய் இருக்கின்றன. இரவிலே என் ஆத்துமா உம்மை ஆர்வத்தோடு தேடுகிறது, காலையிலே என் ஆவி உம்மை வாஞ்சையுடன் தேடுகிறது. உமது நியாயத்தீர்ப்புகள் பூமியிலே வரும்போது உலக மக்கள் நியாயத்தைக் கற்றுக்கொள்வார்கள். கொடியவருக்கு கிருபை காண்பிக்கப்படுகிறபொழுதும், அவர்கள் நியாயத்தைக் கற்றுக்கொள்வதில்லை. நீதியுள்ள நாட்டிலும் அவர்கள் தொடர்ந்து தீமையையே செய்கிறார்கள்; யெகோவாவின் மாட்சிமையையும் அவர்கள் மதிப்பதில்லை. யெகோவாவே, உமது கரம் மேலே உயர்த்தப்பட்டிருக்கிறது, ஆயினும் அதை அவர்கள் காணாதிருக்கிறார்கள். உமது மக்களுக்காக நீர் கொண்டிருக்கும் வைராக்கியத்தைக் கண்டு அவர்கள் வெட்கமடையட்டும்; உமது பகைவருக்காக ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கட்டும். யெகோவாவே, நீரே எங்களுக்குச் சமாதானத்தை நிலைநாட்டுகிறீர்; நாங்கள் நிறைவேற்றியவற்றை நீரே எங்களுக்காக செய்திருக்கிறீர். யெகோவாவே, எங்கள் இறைவனே, உம்மைத்தவிர வேறு ஆளுநர்களும் நம்மை ஆண்டிருக்கிறார்கள்; ஆனால் உமது பெயரை மட்டுமே நாங்கள் கனப்படுத்துகிறோம்.