ஏசாயா 24:1-15

ஏசாயா 24:1-15 TCV

இதோ, யெகோவா பூமியை அழித்து சீர்குலைக்கப்போகிறார். அதன் மேற்பரப்பைப் பாழாக்கி, குடிகளைச் சிதறடிப்பார். மக்களைப்போலவே ஆசாரியனுக்கும், வேலைக்காரனைப் போலவே தலைவனுக்கும், வேலைக்காரியைப் போலவே தலைவிக்கும், வாங்குபவனைப் போலவே விற்பவனுக்கும், இரவல் வாங்குபவனைப் போலவே இரவல் கொடுப்பவனுக்கும், கடனாளியைப்போலவே கடன் கொடுப்பவனுக்குமாக எல்லோருக்கும் ஒரேவிதமாகவே நடக்கும். பூமி முழுவதும் அழிக்கப்பட்டு முழுமையாகக் கொள்ளையடிக்கப்படும். யெகோவாவே இந்த வார்த்தையைப் பேசியிருக்கிறார். பூமி வறண்டு வாடுகிறது, உலகம் நலிந்து வாடுகிறது; பூமியில் உயர்த்தப்பட்டவர்கள் தளர்ந்து போகிறார்கள். பூமி அதன் மக்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அதன் ஒழுங்குவிதிகளைச் சீர்குலைத்து, நித்திய உடன்படிக்கையையும் மீறினார்கள். ஆகவே சாபம் பூமியைச் சூழ்ந்து பற்றிப் பிடித்திருக்கிறது. பூமியின் மக்களே தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். ஆதலால் பூமியின் குடிகள் எரிக்கப்பட்டுப் போனார்கள். மிகச் சிலரே மீந்திருக்கிறார்கள். புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது; மகிழ்ச்சியாயிருக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன. மேளத்தின் ஆனந்த ஒலி ஓய்ந்தது, களிகூர்ந்தவர்களின் சத்தமும் நின்றுவிட்டது; யாழின் இன்னிசை அடங்கிற்று. இனிமேல் அவர்கள் திராட்சை இரசத்தைப் பாட்டுடன் குடிப்பதில்லை, மதுபானம் அதைக் குடிப்பவருக்குக் கசப்பாய் இருக்கும். அழிக்கப்பட்ட பட்டணம் பாழாய்க் கிடக்கிறது; வீடுகளின் நுழைவாசல்கள் ஒவ்வொன்றும் அடைபட்டுக் கிடக்கும். அவர்கள் வீதிகளில் திராட்சை இரசத்திற்காக அழுகிறார்கள்; இன்பமெல்லாம் துன்பமாக மாறுகின்றன; சந்தோஷம் அனைத்தும் பூமியினின்று அகற்றப்படுகின்றன. பட்டணம் பாழாக விடப்பட்டிருக்கிறது, அதன் வாசல் கதவுகள் துண்டுகளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன. அப்பொழுது ஒலிவமரம் உலுக்கப்பட்டு, பழம் பறித்தபின் சில பழங்கள் மீந்திருப்பது போலவும், திராட்சை அறுவடையின்பின் கிளைகளில் சில பழங்கள் மீந்திருப்பது போலுமே பூமியின்மேலும், நாடுகளின் இடையேயும் மீந்திருப்போர் மட்டுமே விடப்பட்டிருப்பர். அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி, மகிழ்ச்சியுடன் சத்தமிடுகிறார்கள்; அவர்கள் மேற்கிலிருந்து யெகோவாவின் மாட்சிமையைப் பாராட்டுகிறார்கள். ஆகவே கிழக்கிலே யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; கடலின் தீவுகளில் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து உயர்த்துங்கள்.