ஓசியா 2:14-23

ஓசியா 2:14-23 TCV

“நான் அவளை வசப்படுத்தப் போகிறேன்; நான் அவளை பாலைவனத்திற்கு அழைத்துச்சென்று, அங்கே அவளோடு அன்பாகப் பேசுவேன். அங்கே அவளுடைய திராட்சைத் தோட்டங்களை நான் அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்; நான் ஆகோர் என்னும் கஷ்டத்தின் பள்ளத்தாக்கை, எதிர்பார்ப்பின் கதவாக ஆக்குவேன். அவள் தன் வாலிப நாட்களில் தான் எகிப்திலிருந்து வந்தபோது, பாடியதுபோல் அங்கே பாடுவாள். “அந்த நாளிலே, நீ என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்காமல், ‘என் கணவனே’ என்று அழைப்பாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் அவளுடைய உதடுகளிலிருந்து பாகால்களின் பெயர்களை அகற்றிவிடுவேன்; அவற்றின் பெயர்கள் இனி ஒருபோதும் சொல்லி வணங்கப்படமாட்டாது. அந்நாளிலே நான் அவர்களுக்காக வெளியின் மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் பிராணிகளோடும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நான் வில்லையும் வாளையும் யுத்தத்தையும் நாட்டில் இராதபடி செய்வேன்; அதனால் அவர்கள் எல்லோரும் படுக்கும்போது பாதுகாப்பாய் இருப்பார்கள். நான் உன்னை என்றென்றைக்கும் எனக்கென்று நிச்சயித்துக்கொள்வேன்; நான் உன்னை நீதியுடனும், நியாயத்துடனும், அன்புடனும், கருணையுடனும் நிச்சயித்துக்கொள்வேன். நான் உண்மையோடு உன்னை எனக்காக நிச்சயித்துக்கொள்வேன்; நீயும் யெகோவாவை ஏற்றுக்கொள்வாய். “அந்த நாட்களிலே நான் பதில் கொடுப்பேன்” என்கிறார் யெகோவா: “நான் ஆகாயங்களுக்குக் கட்டளை கொடுப்பேன், அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும். பூமியானது தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றுக்கு மறுமொழி கொடுக்கும்; இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும். நாட்டில் நான் அவளை எனக்கென்று நாட்டுவேன்; ‘என் அன்புக்குரியவள் அல்ல’ என்று நான் அழைத்தவளுக்கு நான் எனது அன்பைக் காட்டுவேன். ‘என்னுடைய மக்கள் அல்ல’ என்று அழைக்கப்பட்டவர்களை, ‘நீங்கள் என்னுடைய மக்கள்’ என்று சொல்வேன்; அவர்களும், ‘நீரே எங்கள் இறைவன்’ என்று சொல்வார்கள்.”

ஓசியா 2:14-23 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்