எபிரெயர் 7:20-28

எபிரெயர் 7:20-28 TCV

அன்றியும், மற்றவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாகிறார்கள். ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’ ” இந்த ஆணையின்படி இயேசு ஒரு மேன்மையான உடன்படிக்கையின் உத்திரவாதம் அளிப்பவராயிருக்கிறார். மேலும், அநேக ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்யமுடியாதபடி மரணம் அவர்களைத் தடுத்தது. ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கிறபடியால், அவருக்கு நித்திய ஆசாரியமுறை உள்ளவராயிருக்கிறார். ஆதலால், தம் மூலமாக இறைவனிடத்தில் வருகிறவர்களை பரிபூரணமாய் இரட்சிக்க இயேசு வல்லவராய் இருக்கிறார். ஏனெனில், அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசுவதற்காக இயேசு என்றென்றும் வாழ்கிறார். இப்படிப்பட்ட பிரதான ஆசாரியர், நமது தேவைக்குப் பொருத்தமானவராகவே இருக்கிறார். இவர் பரிசுத்தமுள்ளவரும், குற்றம் சாட்டப்படாதவரும், தூய்மையானவரும், பாவிகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டவரும், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவருமாக இருக்கிறார். மற்ற பிரதான ஆசாரியர்கள், முதலாவது தங்களுடைய பாவங்களுக்காகவும், பின்பு மனிதருடைய பாவங்களுக்காகவும் ஒவ்வொரு நாளும் பலிகளைச் செலுத்தினார்கள். ஆனால் அவர்களைப்போல், அப்படி இயேசு பலிசெலுத்த வேண்டியதில்லை. இவரோ தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தபோது, அவர்களுடைய பாவங்களுக்காக ஒரேமுறை பலியானார். ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, மோசேயின் சட்டம் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கிறது; ஆனால் மோசேயின் சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பூரணரான மகனையே நியமித்தது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்