ஆனால் இஸ்ரயேல், தன் இரு கைகளையும் குறுக்காக நீட்டி, எப்பிராயீம் இளையவனாயிருந்தபோதிலும் அவன் தலையின்மேல் தன் வலதுகையை வைத்தான்; மனாசே மூத்தவனாய் இருந்தபோதிலும், அவன் தலையின்மேல் இடதுகையை வைத்தான். அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பை ஆசீர்வதித்து சொன்னது: “என் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோர் வழிபட்ட இறைவனும், என் வாழ்நாள் முழுவதும் இன்றுவரை என் மேய்ப்பராயிருந்த இறைவனும், எல்லா தீங்குகளிலிருந்தும் என்னை விடுவித்த தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக. இவர்கள் என்னுடைய பெயராலும், என் தந்தையர்களான ஆபிரகாமினுடைய, ஈசாக்கினுடைய பெயர்களாலும் அழைக்கப்படுவார்களாக. இவர்கள் பூமியில் மிகுதியாய்ப் பெருகுவார்களாக.” தனது தகப்பன் அவருடைய வலதுகையை எப்பிராயீமுடைய தலையில் வைத்ததை யோசேப்பு கண்டான், அது அவனுக்கு விருப்பமில்லாதிருந்தது; அதனால் எப்பிராயீமுடைய தலையிலிருந்த யாக்கோபின் வலதுகையை மனாசேயின் தலையில் வைப்பதற்காகப் பிடித்தான். யோசேப்பு தன் தகப்பனிடம், “அப்படியல்ல அப்பா, இவனே என் மூத்த மகன்; இவன் தலைமேல் உங்களுடைய வலதுகையை வையுங்கள்” என்றான். ஆனால் யாக்கோபோ அப்படிச் செய்ய மறுத்து, “எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும். மனாசேயும் ஒரு பெரிய மக்கள் கூட்டமாவான், இவனும் பெரியவனாவான். எனினும் இவனுடைய இளைய சகோதரன் இவனிலும் பெரியவனாவான்; இவனுடைய சந்ததி பெருகி பல நாடுகளின் கூட்டமாகும்” என்றான். அன்றையதினம் அவன் அவர்களை ஆசீர்வதித்துச் சொன்னது: “ ‘எப்பிராயீம், மனாசேயைப்போல் உங்களையும் இறைவன் பெருகப்பண்ணுவாராக’ என்று இஸ்ரயேலர் உங்கள் பெயரால் ஆசீர்வாதத்தைச் சொல்வார்கள்.” இவ்வாறு அவன் மனாசேயைவிட எப்பிராயீமுக்கு முதலிடம் கொடுத்தான். பின்பு இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் சாகும் தருவாயில் இருக்கிறேன்; ஆனால் இறைவன் உங்களுடன் இருந்து, அவர் உங்களை உங்கள் முற்பிதாக்களின் நாட்டிற்குத் திரும்பவும் கூட்டிக்கொண்டு போவார். உன் சகோதரருக்கு மேலானவனாக இருக்கிற உனக்கோ, எமோரியரிடமிருந்து நான் வாளினாலும் வில்லினாலும் கைப்பற்றிய மேட்டு நிலத்தைக் கொடுக்கிறேன்” என்றான்.
வாசிக்கவும் ஆதியாகமம் 48
கேளுங்கள் ஆதியாகமம் 48
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆதியாகமம் 48:14-22
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்