ஆதியாகமம் 46:29-34

ஆதியாகமம் 46:29-34 TCV

யோசேப்பு தன் தகப்பன் இஸ்ரயேலைச் சந்திக்க தனது தேரை ஆயத்தப்படுத்தி, கோசேனுக்குப் போனான். யோசேப்பு தன் தகப்பன் முன் போனதுமே தன் தகப்பனைக் கட்டிப்பிடித்து வெகுநேரம் அழுதான். இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் உன் முகத்தைக் கண்டதால், நீ உயிரோடிருக்கிறாய் என்பதை அறிந்துகொண்டேன்; இனி நான் சாகவும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். பின்பு யோசேப்பு தன் சகோதரரிடமும் தன் தகப்பன் குடும்பத்தாரிடமும், “நான் பார்வோனிடம் போய், ‘கானான் நாட்டில் வாழ்ந்த என் சகோதரரும் என் தகப்பனின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் மேய்ப்பர்கள்; அவர்கள் கால்நடைகளை கவனித்துக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும் மாட்டு மந்தைகளுடனும், தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் வந்திருக்கிறார்கள்’ என்று சொல்வேன். பார்வோன் உங்களைக் கூப்பிட்டு, ‘உங்கள் தொழில் என்ன?’ என்று கேட்கும்போது, நீங்கள், ‘உமது அடியாராகிய நாங்களும் எங்கள் முற்பிதாக்களைப் போலவே, சிறுவயதுமுதல் மந்தை மேய்ப்பவர்கள்’ என்று சொல்லுங்கள். அப்போது நீங்கள் கோசேன் நாட்டில் குடியிருக்க அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், எகிப்தியருக்கு மேய்ப்பர்கள் அருவருப்பானவர்கள்” என்றான்.