ஆதியாகமம் 44:1-15

ஆதியாகமம் 44:1-15 TCV

அதன்பின் யோசேப்பு, தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் தூக்கிச் சுமக்கக்கூடிய அளவு தானியத்தால் நிரப்பி, ஒவ்வொருவரின் சாக்குகளின் வாயிலும் அவனவன் வெள்ளிக்காசை வைத்துக் கட்டு. இளையவன் பென்யமீனுடைய சாக்கின் வாயிலே என் வெள்ளிக்கிண்ணத்தையும் தானியத்துக்கான வெள்ளிக்காசையும் வைத்துக் கட்டு” என்று கட்டளையிட்டான். யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான். காலை விடிந்தபோது, அவர்கள் தங்கள் கழுதைகளுடன் வழியனுப்பப்பட்டனர். அவர்கள் பட்டணத்திலிருந்து அதிக தூரம் போகுமுன் யோசேப்பு தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “நீ உடனே அவர்களைப் பின்தொடர்ந்து போ; அவர்களைப் பிடித்தவுடன் அவர்களிடம், ‘நீங்கள் நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்தது ஏன்? இது என் எஜமான் பானம் பண்ணுவதற்கும் எதிர்காலத்தை கணிக்கவும் பயன்படுத்தும் பாத்திரமல்லவா? நீங்கள் செய்திருப்பது கொடிய செயல்’ என்று சொல்” என்றான். அவன் அவர்களைச் சென்றடைந்தபோது, அவ்வார்த்தைகளை அப்படியே சொன்னான். ஆனால் அவர்கள் அவனிடம், “ஏன் ஐயா இப்படியானவற்றைச் சொல்கிறீர்? இப்படிப்பட்ட எதையும் செய்ய உமது அடியாராகிய நாங்கள் எண்ணியும் பார்க்கவில்லை! முன்பு எங்கள் சாக்குகளில் நாங்கள் கண்ட பணத்தைக்கூட கானானிலிருந்து மீண்டும் கொண்டுவந்தோம். அப்படியிருக்க, உமது எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையோ தங்கத்தையோ நாங்கள் ஏன் திருடவேண்டும்? உமது அடியாரில் எவராவது அதை வைத்திருப்பதை நீர் கண்டால் அவன் சாகவேண்டும்; மற்றவர்கள் என் எஜமானின் அடிமைகளாவோம்” என்றார்கள். அதற்கு அவன், “அப்படியானால் சரி; நீங்கள் சொன்னபடியே ஆகட்டும். உங்களில் எவனுடைய சாக்கில் அந்த வெள்ளிப் பாத்திரம் இருக்கிறதோ, அவன் எனக்கு அடிமையாவான்; மற்றவர்கள் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்” என்றான். அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் சாக்கைக் கீழே இறக்கி, அதை அவிழ்த்தார்கள். அப்பொழுது மேற்பார்வையாளன் மூத்தவனுடைய சாக்கிலிருந்து இளையவனுடைய சாக்குவரை சோதிக்கத் தொடங்கினான். அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கில் இருக்கக் காணப்பட்டது. அதைக் கண்டவுடனே அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். பின்பு, அவர்கள் எல்லோரும் தங்கள் கழுதைகளில் சுமைகளை ஏற்றிக்கொண்டு பட்டணத்திற்குத் திரும்பி வந்தார்கள். யூதாவும் அவன் சகோதரரும் திரும்பிவந்தபோது, யோசேப்பு இன்னும் தன் வீட்டிலேயே இருந்தான். அவர்கள் யோசேப்பின் முன் தரையில் முகங்குப்புற விழுந்தார்கள். யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் செய்திருப்பது என்ன? என்னைப்போன்ற ஒரு மனிதன், சம்பவிக்கப் போவதை முன்பே கணித்துவிடுவான் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்றான்.