ஆதியாகமம் 43:15-34

ஆதியாகமம் 43:15-34 TCV

அவ்வாறே அவர்கள் அன்பளிப்பையும் இரண்டு மடங்கு வெள்ளிக்காசையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் தங்களுடன் கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்கள் எகிப்திற்கு விரைந்து சென்று, அங்கே யோசேப்பின் முன்னிலையில் போய் நின்றார்கள். பென்யமீன் அவர்களுடன் வந்திருப்பதைக் கண்ட யோசேப்பு, தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “இவர்களை என் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போ, இவர்கள் இன்று மத்தியானம் என்னுடன் சாப்பிடுவதற்காக, ஒரு மிருகத்தை அடித்து ஆயத்தம் செய்” என்றான். யோசேப்பு கட்டளையிட்டபடியே அந்த அதிகாரி அவர்களை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது பயந்தார்கள். அவர்கள், “முதல்முறை நாம் வந்தபோது, நமது சாக்குகளில் மீண்டும் வைக்கப்பட்டிருந்த வெள்ளிக்காசின் நிமித்தமே நாம் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறோம். நம்மைத் தாக்கி, அடக்கி, நம்மை அடிமைகளாகப் பிடித்து, நமது கழுதைகளையும் எடுத்துக்கொள்ளவே அவன் விரும்புகிறான்” என்று நினைத்தார்கள். அதனால் அவர்கள் யோசேப்பின் மேற்பார்வையாளனிடம் போய், வீட்டு வாசலில் இருந்த அவனுடன் பேசினார்கள். அவர்கள் அவனிடம், “ஆண்டவனே, முதல்முறை தானியம் வாங்க நாங்கள் இங்கே வந்தோம். ஆனால், போகும் வழியில் நாங்கள் இரவு தங்கிய இடத்தில், எங்கள் சாக்குகளைத் திறந்தோம். அப்பொழுது எங்கள் ஒவ்வொருவருடைய சாக்கின் வாயிலும், நாங்கள் கொடுத்த வெள்ளிக்காசு குறையாது அப்படியே இருக்கக் கண்டோம். எனவே அவற்றைத் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறோம். அத்துடன் இம்முறையும் தானியம் வாங்குவதற்கு கூடுதலாக வெள்ளிக்காசைக் கொண்டுவந்திருக்கிறோம். யார் அந்த வெள்ளிக்காசை மறுபடியும் எங்கள் சாக்குகளில் வைத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்கள். அதற்கு மேற்பார்வையாளன் அவர்களிடம், “பரவாயில்லை, நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் இறைவனான உங்கள் தகப்பனுடைய இறைவனே, உங்கள் சாக்குகளில் உங்களுக்குச் செல்வத்தை வைத்திருக்கிறார்; உங்கள் வெள்ளிக்காசை நான் பெற்றுக்கொண்டேன்” என்றான். பின்பு சிமியோனை வெளியே அவர்களிடம் கொண்டுவந்தான். மேற்பார்வையாளன் யோசேப்பின் சகோதரரை வீட்டுக்கு அழைத்துச்சென்று, அவர்கள் கால்களைக் கழுவுவதற்குத் தண்ணீர் கொடுத்தான். அத்துடன் அவர்கள் கழுதைகளுக்குத் தீனியும் கொடுத்தான். அவர்கள் யோசேப்புடன் சாப்பிடப் போவதாகக் கேள்விப்பட்டதால், மத்தியானம் யோசேப்பு வரும்போது கொடுப்பதற்காகத் தங்கள் அன்பளிப்புகளை ஆயத்தம் செய்தார்கள். யோசேப்பு வீட்டுக்கு வந்தபொழுது, அவர்கள் வீட்டுக்குள் கொண்டுவந்திருந்த தங்கள் அன்பளிப்புகளைக் கொடுத்துத் தரைமட்டும் விழுந்து, அவனை வணங்கினார்கள். யோசேப்பு அவர்கள் சுகசெய்திகளை விசாரித்து, “முன்பு நீங்கள் உங்கள் வயதுசென்ற தகப்பனைப் பற்றிச் சொன்னீர்களே, அவர் எப்படியிருக்கிறார்? இன்னும் அவர் உயிரோடிருக்கிறாரா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உமது அடியவனாகிய எங்கள் தகப்பன் இன்னும் உயிரோடு சுகமாக இருக்கிறார்” என்று சொன்னார்கள். அவனுக்கு மதிப்புக் கொடுக்கும்படி குனிந்து வணங்கினார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சொந்தத் தாயின் மகனான, தன் சகோதரன் பென்யமீனைக் கண்டதும், நீங்கள் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா? என்று கேட்டான். பின்பு, “என் மகனே, இறைவன் உனக்குக் கிருபை செய்வாராக” என்றான். யோசேப்பு தன் தம்பியைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டவனாய், விரைந்து வெளியே சென்று அழுவதற்கு இடம் தேடினான். அவன் தன்னுடைய அறைக்குள் சென்று அங்கே அழுதான். பின்பு அவன் தன் முகத்தைக் கழுவி, வெளியே வந்து தன்னை அடக்கிக்கொண்டு, “உணவு பரிமாறுங்கள்” என்றான். எபிரெயருடன் சாப்பிடுவது எகிப்தியருக்கு அருவருப்பாய் இருந்தபடியால், எகிப்தியர் எபிரெயருடன் அமர்ந்து சாப்பிடுவதில்லை. அதனால் யோசேப்புக்கு வேறாகவும், அவன் சகோதரர்களுக்கு வேறாகவும், அவனுடன் சாப்பிட்ட எகிப்தியருக்கு வேறாகவும் உணவு பரிமாறப்பட்டது. யோசேப்புக்கு முன்பாக மூத்தவன் தொடங்கி இளையவன் வரைக்கும் அவர்கள் வயதின்படியே பந்தியில் அமர்த்தப்பட்டார்கள்: யோசேப்பின் சகோதரர் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள். யோசேப்பின் மேஜையிலிருந்து அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, மற்றவர்களுடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனின் பங்கு ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் யோசேப்புடன் தாராளமாக விருந்துண்டு குடித்தார்கள்.