இரண்டு முழு வருடங்கள் சென்றபின் பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன், நைல் நதி அருகே நின்றான். அப்பொழுது கொழுத்ததும், செழிப்பானதுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கிடையில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பிறகே அவலட்சணமும், மெலிந்ததுமான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியேறி வந்து, நதிக்கரையில் மற்ற பசுக்களின் அருகில் நின்றன. அதன்பின் அவலட்சணமும் மெலிந்ததுமான ஏழு பசுக்களும், கொழுத்ததும் செழிப்பானதுமான ஏழு பசுக்களையும் தின்றுவிட்டன. அப்பொழுது பார்வோன் நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டான்.
மீண்டும் அவன் நித்திரை செய்தபோது, இன்னுமொரு கனவு கண்டான். அக்கனவில் நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள் ஒரே தாளிலிருந்து வளர்ந்து வந்தன. பின்பு மெல்லியதும், கீழ்க்காற்றினால் கருகிப்போனதுமான ஏழு நெற்கதிர்கள் முளைத்து வந்தன. அந்த ஏழு மெலிந்த நெற்கதிர்களும், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்களையும் விழுங்கிவிட்டன. பார்வோன் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தபோது, அது கனவு என அறிந்தான்.
காலையில் பார்வோனுடைய மனம் குழப்பமடைந்தது, அதனால் அவன் எகிப்திலுள்ள மந்திரவாதிகள், ஞானிகள் எல்லோரையும் வரவழைத்து, தான் கண்ட கனவுகளை அவர்களுக்குச் சொன்னான். ஆனால், அவர்கள் ஒருவராலும் அக்கனவுகளுக்கு விளக்கங்கூற முடியவில்லை.
அப்பொழுது பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் பார்வோனிடம், “நான் செய்த தவறொன்று இன்றுதான் எனக்கு நினைவு வருகிறது. பார்வோன் ஒருமுறை தமது பணியாட்களில் கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுவோரின் பொறுப்பாளனையும் காவல் அதிகாரியின் வீடாகிய சிறையில் வைத்தார். நாங்கள் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டோம், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விளக்கமுடையதாய் இருந்தன. அங்கே காவலர் அதிகாரிக்குப் பணியாளனாயிருந்த, எபிரெய இளைஞன் ஒருவனும் எங்களோடிருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளைச் சொன்னோம், அவன் எங்கள் ஒவ்வொருவருடைய கனவின் அர்த்தத்தைச் சொல்லி, அவற்றை எங்களுக்கு விளக்கிக் கூறினான். அவன் எங்களுக்குச் சொன்னவாறே எல்லாம் நிறைவேறின: நான் மறுபடியும் எனது பதவியில் நியமிக்கப்பட்டேன், மற்றவனோ தூக்கிலிடப்பட்டான்” என்றான்.
எனவே பார்வோன் யோசேப்பை அழைத்துவரச் செய்தான், அவன் காவல் கிடங்கிலிருந்து உடனே கொண்டுவரப்பட்டான். அவன் சவரம்செய்து, உடைமாற்றி பார்வோன் முன்வந்து நின்றான்.
பார்வோன் யோசேப்பிடம், “நான் ஒரு கனவு கண்டேன், அதற்குரிய விளக்கத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. யாராவது உனக்கு ஒரு கனவைச் சொன்னால், நீ அதற்கு விளக்கம் கூறுவாய் என நான் கேள்விப்பட்டேன்” என்றான்.
அதற்கு யோசேப்பு பார்வோனிடம், “என்னால் அதைச் செய்யமுடியாது, ஆனால் பார்வோன் விரும்பும் பதிலை இறைவன் அவருக்குத் தருவார்” என்றான்.
பார்வோன் யோசேப்பிடம், “என் கனவில் நான் நைல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது கொழுத்ததும் செழிப்புமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கு இடையே மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின்பின் எலும்பும் தோலுமான, மெலிந்த அவலட்சணமான வேறு ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறின. இதைப்போன்ற அவலட்சணமான பசுக்களை எகிப்து நாடெங்கும் நான் ஒருபோதும் கண்டதில்லை. அந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், முதலில் வெளியேறிய ஏழு கொழுத்த பசுக்களையும் தின்றுவிட்டன. அவற்றைத் தின்ற பின்பும், அவை அவற்றைத் தின்றன என யாராலும் சொல்ல முடியாதிருந்தது; அவை முன்புபோலவே அவலட்சணமாய் இருந்தன. அதன்பின் நான் விழித்துக்கொண்டேன்.
“மேலும், நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன். அதில், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள், ஒரே தாளில் ஓங்கி வளர்ந்ததைக் கண்டேன். அதன்பின் வாடிய, மெலிந்த, கீழ்க்காற்றினால் கருகிப்போன வேறு ஏழு கதிர்கள் முளைத்து வந்தன. இந்த மெலிந்த ஏழு நெற்கதிர்களும், மற்ற ஏழு விளைந்த கதிர்களையும் விழுங்கிவிட்டன. நான் இந்தக் கனவுகளை மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால் அவற்றின் விளக்கத்தை ஒருவனாலும் சொல்ல முடியவில்லை” என்றான்.
அப்பொழுது யோசேப்பு, “பார்வோனின் இரு கனவுகளுமே ஒன்றுதான். இறைவன் செய்யப்போவதைப் பார்வோனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நல்ல ஏழு பசுக்களும் ஏழு வருடங்கள், நல்ல ஏழு கதிர்களும் ஏழு வருடங்கள்; இவை இரண்டும் ஒரே கனவுதான். அவற்றின்பின் வந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், அப்படியே கீழ்க்காற்றினால் கருகிப்போன பயனற்ற ஏழு கதிர்களும் பஞ்சமுள்ள ஏழு வருடங்கள்.
“பார்வோனுக்கு நான் சொன்னதுபோல், இறைவன் தாம் செய்யப்போவதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். எகிப்து நாடெங்கும் நிறைவான விளைச்சலுள்ள ஏழு வருடங்கள் வரப்போகின்றன. ஆனால் அதைத் தொடர்ந்து பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் வரும். அப்பொழுது எகிப்தின் நிறைவான விளைச்சல் மறக்கப்படும், பஞ்சம் எகிப்து நாடு முழுவதையும் பாழாக்கும். நாட்டின் நிறைவான விளைச்சலுக்குப் பின் வரப்போகும் பஞ்சம் மிகவும் கொடியதாகையால், அந்த நிறைவான காலம் நினைக்கப்படமாட்டாது. இது இறைவனால் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டபடியாலும், இதை இறைவன் விரைவில் நிறைவேற்றுவார் என்பதாலுமே, இறைவன் இவற்றைப் பார்வோனுக்கு இரண்டு விதத்தில் கனவுகளால் வெளிப்படுத்தியுள்ளார்.
“ஆதலால் பார்வோன் விவேகமும், ஞானமுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, எகிப்து நாட்டுக்கு அவனைப் பொறுப்பாக நியமிப்பாராக. பார்வோன் ஏழு வருட நிறைவான விளைச்சல் காலங்களில் எகிப்தின் அறுவடையில் ஐந்தில் ஒரு பங்கைச் சேகரித்து வைப்பதற்காக, நிலத்தின் மேற்பார்வையாளர்களையும் நியமிப்பாராக. அவர்கள் வரப்போகிற வளமான வருடங்களில் விளையும் தானியங்கள் எல்லாவற்றையும் சேகரித்து, பார்வோனின் அதிகாரத்தின்கீழ் அந்த தானியங்களை பட்டணங்களில் உணவுக்காக அதைப் பாதுகாக்க வேண்டும். எகிப்து பஞ்சத்தினால் அழிந்துபோகாதபடி, அதன்மேல் வரப்போகும் ஏழு வருட பஞ்சகாலத்தில் பயன்படுத்துவதற்காக, அந்த தானியம் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்” என்றான்.
அந்த திட்டம் பார்வோனுக்கும் அவனுடைய அலுவலர்களுக்கும் நலமாய்க் காணப்பட்டது. பார்வோன் தம்முடைய அலுவலர்களிடம், “இறைவனின் ஆவியையுடைய இந்த மனிதனைப்போல் ஒருவனை நாம் காணக்கூடுமோ?” என்று கேட்டான்.
பின்பு பார்வோன் யோசேப்பிடம், “இவை எல்லாவற்றையும் இறைவன் உனக்கு தெரிவித்திருப்பதால், உன்னைப்போல் விவேகமும் ஞானமும் உள்ளவன் வேறொருவனும் இல்லை. எனவே, நான் உன்னை என் அரண்மனைக்கு அதிகாரி ஆக்குகிறேன்; என் மக்கள் யாவரும் உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். என் அரியணையில் மட்டுமே நான் உன்னிலும் பெரியவனாயிருப்பேன்” என்றான்.
மேலும் பார்வோன் யோசேப்பிடம், “உன்னை எகிப்து நாடு முழுவதற்கும் பொறுப்பதிகாரியாக நியமிக்கிறேன்” என்றான். பின்பு பார்வோன் தன் விரலில் அணிந்திருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, யோசேப்பின் விரலில் போட்டான். அவன் சிறந்த மென்பட்டு அங்கியை அவனுக்கு உடுத்தி, கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலியையும் அணிவித்தான். அதிகாரத்தில் தனக்கு அடுத்தவனாக அவனை தேரில் ஏற்றி பவனி வரச்செய்தான். அவனுக்கு முன்சென்ற மனிதர், “மண்டியிட்டுப் பணியுங்கள்!” என்று சத்தமிட்டார்கள். இவ்வாறு பார்வோன் அவனை எகிப்து நாடு முழுவதற்கும் அதிகாரியாக நியமித்தான்.
மேலும் பார்வோன் யோசேப்பிடம், “நான் பார்வோன்; ஆனாலும் எகிப்திலுள்ள யாரும் உனது உத்தரவின்றி கையையோ, காலையோ உயர்த்தக் கூடாது” என்றான். பார்வோன் யோசேப்பின் பெயரை சாப்நாத்பன்னேயா என மாற்றி, போத்திபிரா என்னும் ஓன் பட்டண ஆசாரியனின் மகள் ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். பின்பு யோசேப்பு எகிப்து நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்கச் சென்றான்.