ஆதியாகமம் 41:1-14

ஆதியாகமம் 41:1-14 TCV

இரண்டு முழு வருடங்கள் சென்றபின் பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன், நைல் நதி அருகே நின்றான். அப்பொழுது கொழுத்ததும், செழிப்பானதுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கிடையில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பிறகே அவலட்சணமும், மெலிந்ததுமான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியேறி வந்து, நதிக்கரையில் மற்ற பசுக்களின் அருகில் நின்றன. அதன்பின் அவலட்சணமும் மெலிந்ததுமான ஏழு பசுக்களும், கொழுத்ததும் செழிப்பானதுமான ஏழு பசுக்களையும் தின்றுவிட்டன. அப்பொழுது பார்வோன் நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டான். மீண்டும் அவன் நித்திரை செய்தபோது, இன்னுமொரு கனவு கண்டான். அக்கனவில் நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள் ஒரே தாளிலிருந்து வளர்ந்து வந்தன. பின்பு மெல்லியதும், கீழ்க்காற்றினால் கருகிப்போனதுமான ஏழு நெற்கதிர்கள் முளைத்து வந்தன. அந்த ஏழு மெலிந்த நெற்கதிர்களும், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்களையும் விழுங்கிவிட்டன. பார்வோன் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தபோது, அது கனவு என அறிந்தான். காலையில் பார்வோனுடைய மனம் குழப்பமடைந்தது, அதனால் அவன் எகிப்திலுள்ள மந்திரவாதிகள், ஞானிகள் எல்லோரையும் வரவழைத்து, தான் கண்ட கனவுகளை அவர்களுக்குச் சொன்னான். ஆனால், அவர்கள் ஒருவராலும் அக்கனவுகளுக்கு விளக்கங்கூற முடியவில்லை. அப்பொழுது பானம் பரிமாறுவோரின் பொறுப்பாளன் பார்வோனிடம், “நான் செய்த தவறொன்று இன்றுதான் எனக்கு நினைவு வருகிறது. பார்வோன் ஒருமுறை தமது பணியாட்களில் கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுவோரின் பொறுப்பாளனையும் காவல் அதிகாரியின் வீடாகிய சிறையில் வைத்தார். நாங்கள் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டோம், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விளக்கமுடையதாய் இருந்தன. அங்கே காவலர் அதிகாரிக்குப் பணியாளனாயிருந்த, எபிரெய இளைஞன் ஒருவனும் எங்களோடிருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளைச் சொன்னோம், அவன் எங்கள் ஒவ்வொருவருடைய கனவின் அர்த்தத்தைச் சொல்லி, அவற்றை எங்களுக்கு விளக்கிக் கூறினான். அவன் எங்களுக்குச் சொன்னவாறே எல்லாம் நிறைவேறின: நான் மறுபடியும் எனது பதவியில் நியமிக்கப்பட்டேன், மற்றவனோ தூக்கிலிடப்பட்டான்” என்றான். எனவே பார்வோன் யோசேப்பை அழைத்துவரச் செய்தான், அவன் காவல் கிடங்கிலிருந்து உடனே கொண்டுவரப்பட்டான். அவன் சவரம்செய்து, உடைமாற்றி பார்வோன் முன்வந்து நின்றான்.