ஆதியாகமம் 37:18-30

ஆதியாகமம் 37:18-30 TCV

ஆனால் அவர்களோ, அவனைத் தூரத்திலேயே கண்டார்கள், அவன் அவர்கள் அருகே வருவதற்கு முன்பு அவர்கள் அவனைக் கொல்வதற்குச் சதித்திட்டம் போட்டார்கள். அவர்கள், “இதோ, கனவுக்காரன் வருகிறான்!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள், “வாருங்கள், இப்பொழுது அவனைக் கொன்று, இங்குள்ள குழிகள் ஒன்றில் போட்டுவிடுவோம்; கொடிய மிருகம் அவனைத் தின்றுவிட்டது என்று சொல்வோம். அதன்பின் அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள். ரூபன் அதைக் கேட்டபோது, அவனை அவர்களுடைய கைகளிலிருந்து தப்புவிக்க முயற்சித்தான். அவன், “நாம் அவனைக் கொல்லாமல் விடுவோம். நீங்கள் இரத்தத்தைச் சிந்தாமல் காடுகளிலுள்ள இந்தக் கிணற்றில் அவனைப் போட்டுவிடுவோம், அவன்மேல் கைவைக்க வேண்டாம்” என்றான். யோசேப்பை அவர்களிடமிருந்து தப்புவித்துத் தன் தகப்பனிடத்திற்கு மறுபடியும் கூட்டிச்செல்லவே ரூபன் அவ்வாறு சொன்னான். யோசேப்பு தன் சகோதரரிடம் வந்தவுடனே அவர்கள் அவன் அணிந்திருந்த, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அங்கியை உரிந்து போட்டார்கள். அவர்கள் அவனைத் தூக்கி, அங்கே இருந்த கிணற்றிலே போட்டார்கள். அப்பொழுது அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் வெறுமையாயிருந்தது. பின்பு அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள், அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, இஸ்மயேலரின் வியாபாரிகளின் கூட்டமொன்று கீலேயாத்திலிருந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டார்கள். அவர்களுடைய ஒட்டகங்களிலே வாசனைப் பொருட்களும், தைல வகைகளும், வெள்ளைப்போளமும் ஏற்றப்பட்டிருந்தன. அவர்கள் அவற்றை எகிப்திற்குக் கொண்டுசெல்லும்படி பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது யூதா தன் சகோதரரிடம், “நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் நமக்கு என்ன லாபம்? வாருங்கள், அவன்மேல் நமது கையை வைக்காமல், அவனை இந்த இஸ்மயேலருக்கு விற்போம்; எப்படியும் அவன் நம்முடைய சகோதரனும், நமது சொந்த இரத்தமுமாய் இருக்கிறானே” என்றான். அதற்கு அவன் சகோதரர்கள் சம்மதித்தார்கள். மீதியான் நாட்டு இஸ்மயேல் வியாபாரிகள் அங்கே வந்தபோது, யோசேப்பின் சகோதரர், கிணற்றிலிருந்து அவனை வெளியே எடுத்து, இருபது சேக்கல் வெள்ளிக்கு இஸ்மயேலரிடம் அவனை விற்றார்கள், அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். ரூபன் அந்தக் கிணற்றுக்குத் திரும்பிப்போய், யோசேப்பு அங்கே இல்லை என்பதைக் கண்டு, அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான். அவன் தன் சகோதரரிடம் திரும்பிப்போய், “யோசேப்பு அங்கே இல்லையே! நான் எங்கே போய் தேடுவேன்?” என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்