ஆதியாகமம் 22:1-14

ஆதியாகமம் 22:1-14 TCV

சிறிது காலத்தின்பின் இறைவன், ஆபிரகாமைச் சோதித்தார். அவர், “ஆபிரகாமே!” என்று அவனைக் கூப்பிட்டார். அதற்கு அவன், “இதோ இருக்கிறேன்” என்றான். இறைவன் அவனிடம், “உன் மகனை, நீ நேசிக்கும் உன் ஒரே மகன் ஈசாக்கை, மோரியா பிரதேசத்திற்குக் கூட்டிக்கொண்டுபோ. அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகன காணிக்கையாகப் பலியிடு” என்றார். ஆபிரகாம் அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து, தன் கழுதைக்குச் சேணம் கட்டினான். அவன் தன் வேலைக்காரரில் இருவரையும் தன் மகன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டுபோக ஆயத்தமானான். அதன்பின் தகனபலிக்கு வேண்டிய விறகுகளை வெட்டி எடுத்துக்கொண்டு, இறைவன் தனக்குக் குறிப்பிட்டிருந்த இடத்திற்குப் புறப்பட்டான். மூன்றாம் நாள் ஆபிரகாம் ஏறிட்டுப் பார்த்து, தூரத்தில் அந்த இடத்தைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரிடம், “நீங்கள் கழுதையுடன் இங்கே நில்லுங்கள்; நானும் என் மகனும் அவ்விடத்திற்குப் போய் வழிபாடு செய்துவிட்டு பின்பு, உங்களிடத்திற்குத் திரும்பிவருவோம்” என்றான். ஆபிரகாம் தகனபலிக்குரிய விறகுகளைத் தன் மகன் ஈசாக்கின்மேல் வைத்து, நெருப்பையும் கத்தியையும் தானே கொண்டுபோனான். அவர்கள் இருவரும் போய்க்கொண்டிருக்கும்போது, ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமிடம், “அப்பா?” என்றான். ஆபிரகாம் அதற்குப் மறுமொழியாக, “என்ன மகனே?” என்றான். “விறகும் நெருப்பும் இருக்கின்றன, தகனபலிக்கான செம்மறியாட்டுக் குட்டி எங்கே?” என்று ஈசாக்கு கேட்டான். அதற்கு ஆபிரகாம், “என் மகனே, தகனபலிக்கான செம்மறியாட்டுக் குட்டியை இறைவனே நமக்குக் கொடுப்பார்” என்றான். அவர்கள் இருவரும் தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் இறைவன் குறித்த இடத்திற்கு வந்தபொழுது, ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினான். அவன் தன் மகன் ஈசாக்கைக் கட்டி, அவனைப் பலிபீடத்தில் உள்ள விறகின்மேல் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் கையை நீட்டி தன் மகனை வெட்டுவதற்குக் கத்தியை எடுத்தான். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாம்! ஆபிரகாம்!” என்று அவனைக் கூப்பிட்டார். உடனே அவன், “இதோ இருக்கிறேன்” என்று பதிலளித்தான். அவர், “சிறுவன்மேல் கைவைக்காதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ உன் மகனை, ஒரே மகன் என்றும் பாராமல், எனக்குப் பலியிட உடன்பட்டபடியால், நீ இறைவனுக்குப் பயந்து நடக்கிறவன் என்பதை நான் இப்போது அறிந்துகொண்டேன்” என்றார். ஆபிரகாம் நிமிர்ந்து பார்த்தபோது, முட்செடியில் கொம்புகள் சிக்குண்டிருந்த ஒரு செம்மறியாட்டுக் கடாவைக் கண்டான். அவன் அங்குபோய், அந்த செம்மறியாட்டுக் கடாவைப் பிடித்து தன் மகன் ஈசாக்கிற்குப் பதிலாக அதை இறைவனுக்குத் தகன காணிக்கையாகப் பலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்திற்கு யெகோவாயீரே எனப் பெயரிட்டான். அதனால், “யெகோவாவின் மலையில் கொடுக்கப்படும்” என இன்றுவரை சொல்லப்படுகிறது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஆதியாகமம் 22:1-14