அன்று மாலை, சோதோம் பட்டணத்து வாசலிலே லோத்து உட்கார்ந்திருந்தபோது, அவ்விரு தூதர்களும் அவ்விடம் வந்தார்கள். லோத்து அவர்களைக் கண்டவுடன், அவர்களைச் சந்திப்பதற்காக எழுந்துபோய் தரைமட்டும் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயாமார்களே” நீங்கள் இருவரும், அடியேனுடைய வீட்டிற்கு வாருங்கள். “நீங்கள் உங்கள் கால்களைக் கழுவி இன்றிரவு என்னுடன் தங்கி, அதிகாலையில் உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான்.
அதற்கு அவர்கள், “வேண்டாம், நாங்கள் இன்றிரவு நகரச் சதுக்கத்திலே தங்குவோம்” என்றார்கள்.
அவன் அவர்களை வற்புறுத்தி அழைத்ததால், அவர்கள் அவனுடைய வீட்டிற்குள் போனார்கள். லோத்து புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு உணவு தயாரித்தான். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். அவர்கள் படுக்கைக்குப் போகுமுன், சோதோம் பட்டணத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வாலிபர்முதல் முதியோர்வரை எல்லா ஆண்களும் வந்து லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் லோத்தைக் கூப்பிட்டு, “இன்றிரவு, உன்னிடம் வந்த மனிதர் எங்கே? நாங்கள் அவர்களுடன் பாலுறவுகொள்ளும்படி அவர்களை வெளியே கொண்டுவா” என்றார்கள்.
உடனே லோத்து, வீட்டுக்கு வெளியே வந்து, கதவைத் தனக்குப் பின்னால் பூட்டிக்கொண்டு அவர்களிடம், “வேண்டாம் நண்பர்களே! இந்தக் கொடுமையான செயலைச் செய்யவேண்டாம். இதோ, எனக்குக் கன்னியரான இரு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களை உங்களிடம் கொண்டுவருகிறேன். உங்களுக்கு விருப்பமானபடி அவர்களுடன் நடவுங்கள். ஆனால் இந்த மனிதரை ஒன்றும் செய்யவேண்டாம். ஏனெனில், அவர்கள் பாதுகாப்புக்காக என் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்” என்றான்.
அதற்கு அவர்கள், “அப்பாலே போ; அந்நியனாக இவ்விடத்திற்கு வந்த இவன் இப்பொழுது எங்களுக்கு நீதிபதியாக இருக்கப் பார்க்கிறான். அவர்களைவிட இப்பொழுது உன்னை மோசமாக நடத்துவோம்” என்று சொல்லி, லோத்தைத் தள்ளி கதவை உடைக்கப் போனார்கள்.
ஆனால், வீட்டுக்குள் இருந்த இரு மனிதரும் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தை வீட்டிற்குள்ளே இழுத்துக் கதவைப் பூட்டினார்கள். பின்பு அந்த மனிதர், வீட்டுக்கு வெளியே நின்ற வாலிபர்முதல் முதியோர்வரை எல்லோருடைய கண்களையும் குருடாக்கினார்கள். அதனால் அவர்களால் வீட்டு வாசலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவ்விருவரும் லோத்திடம், “இங்கு உனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? உன் மகன்களோ, மகள்களோ, மருமகன்களோ அல்லது உனக்குச் சொந்தமான வேறு யாரேனும் இந்தப் பட்டணத்தில் இருந்தால், அவர்களையும் கூட்டிக்கொண்டு இவ்விடத்திலிருந்து வெளியே போ. ஏனெனில், நாங்கள் இவ்விடத்தை அழிக்கப்போகிறோம்; இங்கு உள்ளவர்களுக்கு எதிராக யெகோவாவின் முன்னிலையில் எட்டியுள்ள கூக்குரல் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால், இப்பட்டணத்தை அழிக்கும்படி அவர் எங்களை அனுப்பியிருக்கிறார்” என்றார்கள்.
உடனே லோத்து வெளியே போய், தன் மகள்களுக்கு திருமணம் செய்ய நியமிக்கப்பட்டிருந்த மருமகன்களிடம், “விரைவாய் இந்த இடத்தைவிட்டு வெளியேறுங்கள். ஏனெனில், யெகோவா இப்பட்டணத்தை அழிக்கப்போகிறார்” என்றான். ஆனால் அவனுடைய மருமகன்களோ, அவன் கேலிசெய்கிறான் என்று நினைத்தார்கள்.