ஆதியாகமம் 16:9-16

ஆதியாகமம் 16:9-16 TCV

அப்பொழுது யெகோவாவின் தூதனானவர், “நீ உன் எஜமாட்டியிடம் திரும்பிப்போய், அவளுக்குக் கீழ்ப்படிந்திரு” என்றார். மேலும் யெகோவாவினுடைய தூதனானவர், “உன் சந்ததிகளை எண்ணமுடியாத அளவு பெருகப்பண்ணுவேன்” என்றார். மறுபடியும் யெகோவாவின் தூதனானவர் அவளிடம் சொன்னது: “நீ இப்பொழுது கர்ப்பவதியாயிருக்கிறாய், உனக்கு ஒரு மகன் பிறப்பான். நீ அவனுக்கு இஸ்மயேல் என்று பெயரிட வேண்டும். ஏனெனில் யெகோவா உன் அழுகுரலைக் கேட்டிருக்கிறார். அவன் காட்டுக் கழுதையைப் போல் வாழ்கிற மனிதனாயிருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கைகளும் அவனுக்கு விரோதமாக இருக்கும்; அவன் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராக வெளிப்படையான விரோதத்துடன் வாழ்வான்.” அப்பொழுது அவள், “என்னைக் காண்கிறவரை நானும் இங்கே கண்டேன்” என்று சொல்லி, தன்னுடன் பேசிய யெகோவாவுக்கு, “நீர் என்னைக் காண்கிற இறைவன்” என்று பெயரிட்டாள். அதனால் அக்கிணறு, பீர்லகாய்ரோயீ எனப் பெயரிடப்பட்டது; அது காதேசுக்கும், பாரேத்திற்கும் இடையே இன்னும் இருக்கிறது. ஆகார், ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டான். ஆகார் இஸ்மயேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதுடையவனாய் இருந்தான்.