ஆதியாகமம் 1:19-31

ஆதியாகமம் 1:19-31 TCV

அப்பொழுது மாலையும் காலையுமாகி, நான்காம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “தண்ணீரில் நீந்தும் உயிரினங்கள் பெருகட்டும், பூமிக்கு மேலாக வானவெளியெங்கும் பறவைகள் பறக்கட்டும்” என்று சொன்னார். இவ்வாறு இறைவன் பெரிய கடல் விலங்குகளையும், நீரில் நீந்தி வாழும் எல்லா உயிரினங்களையும் அவற்றின் வகைகளின்படியும், சிறகுள்ள எல்லா பறவைகளையும் அதினதின் வகைகளின்படியும் படைத்தார். அது நல்லது என்று இறைவன் கண்டார். இறைவன் அவற்றை ஆசீர்வதித்து, “பலுகி எண்ணிக்கையில் பெருகி, கடல்நீரை நிரப்புங்கள், பூமியில் பறவைகளும் பெருகட்டும்” என்று சொன்னார். அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஐந்தாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “நிலம் உயிரினங்களை அவற்றின் வகைகளின்படி உண்டாக்கட்டும்: வளர்ப்பு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் அதினதின் வகையின்படி உண்டாக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் காட்டு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், வளர்ப்பு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், தரையில் ஊரும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அவற்றின் வகைகளின்படியும் உண்டாக்கினார். அது நல்லது என்று இறைவன் கண்டார். அதன்பின் இறைவன், “நமது உருவிலும் நமது சாயலின்படியும் மனிதனை உண்டாக்குவோம்; அவர்கள் கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், எல்லா காட்டு மிருகங்களையும், தரையெங்கும் ஊரும் எல்லா உயிரினங்களையும் ஆளுகை செய்யட்டும்” என்று சொன்னார். அப்படியே இறைவன் தமது சாயலில் மனிதனைப் படைத்தார், இறைவனின் சாயலிலேயே அவர் அவர்களைப் படைத்தார். அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். அதன்பின் இறைவன் அவர்களை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகி எண்ணிக்கையில் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களையும் ஆண்டு நடத்துங்கள்” எனக் கூறினார். அதன்பின் இறைவன், “பூமி முழுவதும் மேற்பரப்பிலுள்ள விதை தரும் தாவரங்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் எல்லா மரங்களையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். அவை உங்களுக்கு உணவாயிருக்கும். பூமியிலுள்ள எல்லா மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களுக்கும், அதாவது தன்னில் உயிர்மூச்சு உள்ள எல்லா உயிரினங்களுக்கும் நான் பச்சைத் தாவரங்கள் எல்லாவற்றையும் உணவாகக் கொடுக்கிறேன்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார், அது மிக நன்றாயிருந்தது. அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஆறாம் நாள் ஆயிற்று.