யாத்திராகமம் 6:14-30

யாத்திராகமம் 6:14-30 TCV

இஸ்ரயேலரின் குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே: யாக்கோபின் முதற்பேறான மகனாகிய ரூபனின் மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். ரூபனின் வம்சங்கள் இவையே. சிமியோனின் மகன்கள்: எமுயேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணின் மகனான சாவூல் என்பவர்கள் ஆவர். சிமியோனுடைய வம்சங்கள் இவையே. பதிவேட்டின்படி லேவியின் மகன்களின் பெயர்கள்: கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள் ஆவர். லேவி 137 வருடங்கள் வாழ்ந்தான். லிப்னீயும் சீமேயியும் கெர்சோனின் வம்சத்தின் மகன்கள் ஆவர். அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் கோகாத்தின் மகன்கள் ஆவர். கோகாத் 133 வருடங்கள் வாழ்ந்தான். மெராரியின் மகன்கள் மகேலி, மூஷி என்பவர்கள். அவர்களுடைய பதிவேட்டின்படி லேவியின் வம்சங்கள் இவையே. அம்ராம் தன் தகப்பனின் சகோதரியான யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும், மோசேயையும் பெற்றாள். அம்ராம் 137 வருடங்கள் வாழ்ந்தான். இத்சேயாரின் மகன்கள் கோராகு, நெப்பேக், சிக்ரி என்பவர்கள் ஆவர். ஊசியேலின் மகன்கள்: மீசயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள் ஆவர். அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமான எலிசபாளை ஆரோன் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள். கோராகியரின் மகன்கள்: ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள் ஆவர். கோராகிய வம்சங்கள் இவையே. ஆரோனின் மகன் எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள். வம்சம் வம்சமாக லேவிய குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே. இதே ஆரோனுக்கும், மோசேக்குமே, “இஸ்ரயேலருடைய கோத்திரப்பிரிவின்படி அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவாருங்கள்” என்று யெகோவா சொல்லியிருந்தார். இதே மோசேயும் ஆரோனுமே எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவது பற்றி, எகிப்திய அரசன் பார்வோனிடம் பேசினார்கள். யெகோவா எகிப்தில் மோசேயுடன் பேசியபோது, யெகோவா மோசேயிடம், “நானே யெகோவா. நான் உனக்குச் சொல்லும் எல்லாவற்றையும் எகிப்திய அரசன் பார்வோனுக்குச் சொல்” என்றார். ஆனால் மோசேயோ யெகோவாவிடம், “நான் திக்குவாயுள்ளவன். பார்வோன் எப்படி எனக்குச் செவிகொடுப்பான்?” என்றான்.