யாத்திராகமம் 6:1-8

யாத்திராகமம் 6:1-8 TCV

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இப்பொழுது நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ காண்பாய்: என் பலத்த கரத்தின் நிமித்தம் அவன் அவர்களைப் போகவிடுவான்; அவன் என் கரத்தின் வல்லமையின் நிமித்தம் அவர்களைத் தன் நாட்டிலிருந்து துரத்தியே விடுவான்” என்றார். பின்னும் இறைவன் மோசேயிடம், “நானே யெகோவா. ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் எல்லாம் வல்ல இறைவனாக நானே காட்சியளித்தேன். ஆனாலும் யெகோவா என்ற என் பெயரால் நான் என்னை அவர்களுக்கு அறியச்செய்யவில்லை. அத்துடன், ‘இஸ்ரயேல் மக்கள் பிறநாட்டினராய் வாழ்ந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பேன்’ என்று அவர்களுடன் ஒரு உடன்படிக்கையையும் ஏற்படுத்தினேன். மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்துகிற இஸ்ரயேலரின் அழுகுரலைக் கேட்டிருக்கிறேன்; என்னுடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தேன். “ஆகையால், நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘நானே யெகோவா, நான் எகிப்தியரின் நுகத்தின் கீழிருந்து உங்களை வெளியே கொண்டுவருவேன். நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாய் இருப்பதிலிருந்து உங்களை விடுதலையாக்குவேன்; நான் பலத்த கரத்தினாலும், தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களினாலும் உங்களை மீட்பேன். உங்களை என் சொந்த மக்களாக்கி, நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்பொழுது எகிப்திய நுகத்தின் கீழிருந்து, உங்களை விடுவித்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்று அறிந்துகொள்வீர்கள். ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் கொடுப்பேன் என்று, உயர்த்திய கரத்தினால் நான் ஆணையிட்ட நாட்டிற்கு உங்களைக் கொண்டுவருவேன். அதை உங்களுக்கு உடைமையாகக் கொடுப்பேன். நானே யெகோவா’ ” என்றார்.