யாத்திராகமம் 2:15-22

யாத்திராகமம் 2:15-22 TCV

பார்வோன் இதைப்பற்றி கேள்விப்பட்டதும் மோசேயைக் கொலைசெய்ய முயன்றான்; ஆனால் மோசே பார்வோனிடம் இருந்து தப்பியோடி, மீதியானில் வாழும்படி போய், அங்கே ஒரு கிணற்றருகே உட்கார்ந்திருந்தான். மீதியானிலுள்ள ஒரு ஆசாரியருக்கு ஏழு மகள்கள் இருந்தனர்; அவர்கள் தங்கள் தகப்பனின் மந்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும்படி தண்ணீரை எடுத்துத் தொட்டிகளை நிரப்புவதற்காக அங்கே வந்தார்கள். அப்பொழுது சில மேய்ப்பர்கள் அங்கே வந்து அவர்களைத் துரத்தினார்கள். மோசே எழுந்துவந்து, அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய மந்தைக்குத் தண்ணீர் அள்ளிக்கொடுத்தான். அப்பெண்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுயேலிடம் வந்தபோது, அவன் அவர்களிடம், “ஏன் இன்றைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீர்கள்” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “எகிப்தியன் ஒருவன் எங்களை மேய்ப்பரிடமிருந்து காப்பாற்றினான்; அவன் எங்களுக்காகத் தண்ணீரும் அள்ளி, எங்கள் மந்தைக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்றார்கள். அப்பொழுது அவன் தன் மகள்களிடம், “அவன் எங்கே? ஏன் அவனை விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று கேட்டு, “ஏதாவது சாப்பிடும்படி அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றான். மோசே அந்த மனிதனுடன் தங்கியிருப்பதற்குச் சம்மதித்தான்; சிறிது காலத்தின்பின் அவன் தன் மகள் சிப்போராளை மோசேக்கு திருமணம் செய்துகொடுத்தான். சிப்போராள் ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது மோசே, “நான் வேற்று நாட்டில் பிறநாட்டினனாய் இருக்கிறேன்” என்று சொல்லி அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.

யாத்திராகமம் 2:15-22 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்