யாத்திராகமம் 17:8-16

யாத்திராகமம் 17:8-16 TCV

அதன்பின் அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரயேலரைத் தாக்கினார்கள். அப்பொழுது மோசே யோசுவாவிடம், “எங்கள் மனிதரில் சிலரைத் தெரிந்துகொண்டு அமலேக்கியரோடு சண்டை செய்ய வெளியே போ. நான் நாளை என் கையில் இறைவனின் கோலைப் பிடித்துக்கொண்டு மலையுச்சியில் நிற்பேன்” என்றான். மோசே உத்தரவிட்டபடியே யோசுவா அமலேக்கியருடன் போரிட்டான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலையுச்சிக்குப் போனார்கள். மோசே தன் கைகளை உயர்த்திக்கொண்டிருக்கும்வரை, இஸ்ரயேலர் வென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் மோசே தன் கைகளைக் கீழே விடும்பொழுதோ, அமலேக்கியர் வெல்லத்தொடங்கினார்கள். மோசேயின் கைகள் தளர்ந்துபோயின. அப்போது ஆரோனும், ஊரும் ஒரு கல்லை எடுத்து அவனுக்குக் கீழே வைத்தார்கள். அவன் அதன்மேல் உட்கார்ந்தான். ஆரோனும், ஊரும் ஒரு பக்கம் ஒருவனும், மறுபக்கம் மற்றவனுமாக அவனுடைய கைகளை உயர்த்தித் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள். அதனால் சூரியன் மறையும்வரை அவன் கைகள் உறுதியாயிருந்தன. எனவே யோசுவா வாளினால் அமலேக்கியப் படையை மேற்கொண்டான். அதன்பின் யெகோவா மோசேயிடம், “இன்று நடந்தது நினைவிற்கொள்வதற்காக இதை ஒரு புத்தகச்சுருளில் எழுதி, அதை யோசுவா கேட்கும்படி சொல். ஏனெனில், நான் வானத்தின் கீழிருந்து அமலேக்கியரைப் பற்றிய நினைவையே இல்லாது போகும்படி அழித்துவிடுவேன் என்று சொல்” என்றார். மோசே அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி அவ்விடத்திற்கு யெகோவா என் வெற்றிக்கொடி என்று பெயரிட்டான். பின்பு மோசே, “யெகோவாவினுடைய அரியணைக்கு விரோதமாக அமலேக்கின் கரங்கள் உயர்த்தப்பட்டிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் யெகோவா அமலேக்கியருக்கு எதிராக யுத்தம் செய்வார்” என்றான்.