யாத்திராகமம் 16:11-19

யாத்திராகமம் 16:11-19 TCV

அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நான் இஸ்ரயேலருடைய முறுமுறுப்புகளைக் கேட்டேன். நீ அவர்களிடம், ‘நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, காலையில் அப்பத்தினால் திருப்தியாவீர்கள். அப்பொழுது நானே உங்கள் இறைவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்’ என்று சொல்” என்றார். அந்த மாலை வேளையிலேயே காடைகள் வந்து அவர்கள் முகாமை மூடிக்கொண்டன. காலையில் முகாமைச் சுற்றி ஒரு பனிப்படலம் படிந்தது. பனி விலகிய பின்பு, தரையின்மீது உறைபனி போன்ற மெல்லிய துகள்கள் பாலைவனத்தில் காணப்பட்டன. அதை இஸ்ரயேலர் கண்டபோது, ஒருவரையொருவர் பார்த்து, “இது என்ன?” என்றார்கள். ஏனெனில், அது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாதிருந்தது. அப்பொழுது மோசே அவர்களிடம், “இதுதான் நீங்கள் உண்பதற்காக யெகோவா கொடுத்திருக்கும் அப்பம். யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே: ‘ஒவ்வொருவரும் தான் சாப்பிடக்கூடியதைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் கூடாரத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஒரு ஓமர் அளவுப்படி, ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள்’ ” என்றான். இஸ்ரயேலர் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே செய்தார்கள். சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள். அவர்கள் சேர்த்தவற்றை ஓமரால் அளந்த போது அதிகமாகச் சேர்த்தவனிடம் தேவைக்கதிகமாக இருந்ததில்லை, குறைவாகச் சேர்த்தவனிடம் போதாமல் இருக்கவுமில்லை. ஒவ்வொருவரும் தனக்குவேண்டிய அளவையே சேர்த்தார்கள். அப்பொழுது மோசே அவர்களிடம், “ஒருவரும் மறுநாள் காலைவரை அதில் எதையும் வைத்திருக்கக்கூடாது” என்று சொன்னான்.