யாத்திராகமம் 12:21-30

யாத்திராகமம் 12:21-30 TCV

அப்பொழுது மோசே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் யாவரையும் அழைத்து, அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உடனேபோய் உங்கள் குடும்பங்களுக்கான மிருகங்களைத் தெரிந்துகொண்டு பஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள். பின்பு ஒரு கட்டு ஈசோப்புக் குழையை எடுத்து, அதைக் கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் தோய்த்து, அதில் சிறிதளவு இரத்தத்தைக் கதவு நிலையின் மேற்சட்டத்திலும், அதன் இரண்டு நிலைக்கால்களிலும் பூசுங்கள். காலைவரை உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைக் கடந்து வெளியே போகக்கூடாது. யெகோவா எகிப்தியரை அழிப்பதற்காகத் தேசத்தின் வழியாகக் கடந்துசெல்வார்; அப்பொழுது உங்கள் கதவின், மேல்சட்டத்திலும், நிலைக்கால்கள் இரண்டிலும் இரத்தத்தைக் காணும்போது, அவர் அந்த வாசலைக் கடந்துபோவார், அழிப்பவன் உங்கள் வீடுகளில் புகுந்து உங்களை அழிக்க அவர் அனுமதிக்கமாட்டார். “உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்குமான இந்த அறிவுறுத்தல்களை நிரந்தரமாகக் கைக்கொள்ளுங்கள். யெகோவா உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, இந்த வழிபாட்டைக் கைக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த வழிபாடு எதைக் குறிக்கின்றது?’ என்று கேட்பார்கள், அப்பொழுது நீங்கள் அவர்களிடம், ‘யெகோவா எகிப்தியரை அழிக்கும்போது எகிப்திலுள்ள இஸ்ரயேலரின் வீடுகளைக் கடந்துசென்று எங்கள் வீடுகளைத் தப்பவிட்டார். எனவே இது யெகோவாவுக்குச் செலுத்தும் பஸ்கா பலி’ என்று சொல்லுங்கள்” என்று மோசே சொன்னான். அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து இறைவனை வழிபட்டார்கள். யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள். அன்று நள்ளிரவு எகிப்திலுள்ள முதற்பிறந்த மகன்கள் எல்லாவற்றையும் யெகோவா அழித்தார்; அரியணையில் அமர்ந்திருந்த பார்வோனின் தலைப்பிள்ளை முதல், காவற்கிடங்கிலிருந்த கைதியின் தலைப்பிள்ளைவரை முதற்பேறுகள் அனைத்தையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார். பார்வோனும், அவன் அதிகாரிகள் யாவரும், எகிப்தியர் அனைவரும் அன்றிரவில் விழித்து எழுந்தனர். எகிப்தில் ஒரு பெரிய ஓலம் உண்டாயிற்று. ஏனெனில் சாவு இல்லாத ஒரு வீடும் இருக்கவில்லை.

யாத்திராகமம் 12:21-30 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்