மூடத்தனம் உள்ளவர்களாய் இருக்கவேண்டாம். கர்த்தரின் சித்தம் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள். மதுபானம் குடித்து வெறிகொள்ளவேண்டாம். அது சீர்கேட்டிற்கே வழிநடத்தும். மாறாக பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவரோடொருவர் பேசி, உங்கள் உள்ளத்திலே இசைபாடி கர்த்தரைப் போற்றுங்கள். எப்பொழுதும், எல்லாவற்றிற்காகவும் நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில், பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் பயபக்தியின் நிமித்தம், ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
மனைவிகளே, நீங்கள் கர்த்தருக்குப் பணிந்து நடப்பதுபோல, உங்கள் கணவருக்கு பணிந்து நடவுங்கள். ஏனெனில் கிறிஸ்து தமது உடலாகிய திருச்சபையின் தலைவராய் இருப்பதுபோல, கணவன் தனது மனைவியின் தலைவனாய் இருக்கிறான். கிறிஸ்துவே தமது திருச்சபையின் இரட்சகராக இருக்கிறார். அப்படியே திருச்சபையானது கிறிஸ்துவுக்குப் பணிந்து நடப்பதுபோல, மனைவிகளும் தங்கள் கணவர்களுக்கு எல்லாவற்றிலும் பணிந்திருக்கவேண்டும்.
கணவர்களே, கிறிஸ்து திருச்சபையில் அன்புகூர்ந்து, அதற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போலவே, நீங்களும் மனைவியிடம் அன்பாய் இருங்கள். கிறிஸ்து வார்த்தையின் மூலம் தண்ணீரினால் திருச்சபையைச் சுத்திகரித்து பரிசுத்தமாக்கும்படியும், மகிமையுள்ள திருச்சபை எவ்வித மாசும், மறுவும், வேறு எவ்வித குறைபாடும் அற்றதாகவும், பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் தம்முன் நிறுத்திக்கொள்ளும்படியே கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார். இவ்விதமாகவே கணவர்களும் தங்கள் மனைவிகளில், தங்கள் சொந்த உடல்களைப்போல் அன்பு செலுத்தவேண்டும். தன் மனைவியில் அன்பாயிருக்கிறவன் தன்னிலேயே அன்பாயிருக்கிறான். ஒருவனும் தன் சொந்த உடலை ஒருபோதும் வெறுத்ததில்லை. மாறாக, தனது உடலுக்கு வேண்டியதைக் கொடுத்து அதைப் பராமரிக்கிறான். இதுபோலவே, கிறிஸ்துவும் தமது திருச்சபையைப் பராமரிக்கிறார். நாமும் கிறிஸ்துவிடைய உடலின் அங்கங்களாய் இருக்கிறோமே. இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள் இது ஒரு மிக ஆழ்ந்த இரகசியம். ஆனால் நானோ கிறிஸ்துவையும், திருச்சபையையும் பற்றிப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் ஒவ்வொருவனும், தன்னில் தான் அன்பாயிருப்பது போலவே, தன் மனைவியிலும் அன்பாயிருக்கவேண்டும். ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை மதித்து நடக்கவேண்டும்.