ஆகவே நீங்கள் இறைவனுடைய அன்பான பிள்ளைகளாய் இருப்பதனால், இறைவனைப்போல் நடவுங்கள். கிறிஸ்து நம்மில் அன்பாயிருந்ததினால், இறைவனுக்கு நறுமணமுள்ள காணிக்கையாயும், பலியாயும் நமக்காகத் தம்மைக் கொடுத்தார். அதுபோலவே நீங்களும் அன்புள்ள வாழ்க்கையை வாழுங்கள்.
உங்கள் மத்தியில் விபசாரம், பாலியல் ஒழுக்கக்கேடு, பேராசை ஆகிய எந்தவொரு அசுத்தமும் இருக்கக்கூடாது. இறைவனுடைய பரிசுத்த மக்களுக்கு இவை தகுதியற்றதானபடியால், இவற்றைப்பற்றினப் பேச்சே உங்களுக்குள் அடிபடக்கூடாது. அவ்வாறே வெட்கமான செயலும், மூடத்தனமான பேச்சுகளும், கீழ்த்தரமான பரியாசங்களும் உங்களுக்கு ஏற்றதல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்துவதே உங்களுக்குத் தகுதியானது. ஒழுக்கக்கேடாய் நடக்கிறவனோ, தூய்மையற்றவனோ, இறைவன் அல்லாதவைகளை வணங்குகிறவனுக்கு ஒப்பான பேராசைக்காரனோ, கிறிஸ்துவுக்கும் இறைவனுக்கும் உரிய அரசில் எவ்வித உரிமைப்பங்கும் பெறுவதில்லை. இதை நிச்சயமாய் அறிந்துகொள்ளுங்கள். வீணான வார்த்தைகளினால் ஒருவரும் உங்களை ஏமாற்ற இடமளிக்காதீர்கள். இப்படிப்பட்டவற்றின் நிமித்தமே இறைவனுடைய கோபம், அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள்மேல் வருகிறது, எனவே இப்படிப்பட்டவர்களோடு பங்காளர்களாய் இருக்கவேண்டாம்.
ஏனெனில் ஒருகாலத்தில் நீங்கள் இருளாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, கர்த்தரில் வெளிச்சமாய் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழுங்கள். வெளிச்சத்தின் கனியோ, எல்லா நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் கொண்டிருக்கிறது. எனவே கர்த்தருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடியது எது என்று அறிந்துகொள்ளுங்கள். இருளுக்குரிய பயனற்ற செயல்களில் பங்காளர்களாய் இருக்கவேண்டாம். அவைகளை வெளியரங்கமாக்குங்கள். ஏனெனில், கீழ்ப்படியாதவர்கள் இரகசியமாக செய்கின்ற காரியங்களைக் குறித்துப் பேசுவதுகூட வெட்கத்துக்குரியதாய் இருக்கிறது. எல்லாக் காரியங்களும் வெளிச்சத்தினால் வெளிப்படுத்தப்படும்போது, மறைந்திருந்தவைகள் தெரியவருகின்றன. ஏனெனில், வெளிச்சமே எல்லாவற்றையும் தெளிவாய் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் இப்படி சொல்லப்பட்டுள்ளது:
“நித்திரை செய்பவனே விழித்தெழு,
இறந்தவர்களை விட்டு உயிர்த்தெழு,
கிறிஸ்து உன்மேல் பிரகாசிப்பார்.”
எனவே நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைக்குறித்து கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப்போல் வாழவேண்டாம், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள். நாட்கள் தீயதாய் இருப்பதனால், கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.