எபேசியர் 4:22-32

எபேசியர் 4:22-32 TCV

உங்கள் முந்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், ஏமாற்றும் ஆசைகளினால் உங்கள் பழைய மனித சுபாவம் சீர்கெடுவதால், அதை நீக்கிவிட வேண்டும் என போதிக்கப்பட்டீர்கள்; உங்கள் மனப்பான்மையில் புதிதாக்கப்பட வேண்டும் என்றும் அறிந்திருக்கிறீர்கள். இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொள்ளுங்கள். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும், உங்களிடமிருந்து பொய் சொல்வதை அகற்றிவிடுங்கள். நாம் எல்லோரும் ஒரே உடலின் அங்கத்தினர்களாய் இருப்பதனால், நாம் ஒவ்வொருவரும் நமது அயலவருடன் உண்மையையே பேசவேண்டும். “நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்”: பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும். பிசாசுக்கு உங்கள் வாழ்வில் கால் வைக்க இடம் கொடாதிருங்கள். களவு செய்வதில் ஈடுபட்டவன் தொடர்ந்து களவு செய்யாமல், தனது கைகளினால் பயனுள்ள வேலைகளைச் செய்யவேண்டும். அப்போது ஏழைகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும், அவனிடம் ஏதாவது இருக்கும். தீமையான வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளியே புறப்படவேண்டாம். ஆனால் கேட்பவர்கள் பயனடையும்படி, அவர்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, வளர்ச்சி பெறுவதற்கு உதவியான வார்த்தைகளையே பேசுங்கள். இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாதிருங்கள். நீங்கள் இறைவனுடையவர்கள் என்பதற்கு உங்களின் மீட்பு நாள்வரை உங்கள்மீது பொறிக்கப்பட்ட அச்சடையாளமாய் ஆவியானவர் இருக்கிறார். எல்லா விதமான கசப்பு உணர்வுகள், சினம், கோபம், வாய்ச்சண்டை, அவதூறாய் பேசுதல் ஆகியவற்றையும், எல்லா விதமான தீங்கையும் விட்டுவிடுங்கள். ஒருவரில் ஒருவர் தயவுள்ளவர்களாயும், மனவுருக்கமுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவில் இறைவன் உங்களை மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.