பிரசங்கி 4:4-8

பிரசங்கி 4:4-8 TCV

தனது அயலவனைக் குறித்து மனிதன் கொண்டிருக்கும் பொறாமையிலிருந்தே, எல்லா உழைப்பும் திறமையும் ஏற்படுகிறது என்று நான் கண்டுகொண்டேன். இதுவும் அர்த்தமற்றதே; காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு தன்னையே அழித்துக்கொள்கிறான். காற்றைத் துரத்திப்பிடிப்பது போன்ற பயனற்ற உழைப்பினால், இரு கைகளையும் நிரப்புவதைவிட, மன அமைதியுடன் ஒரு கையை நிரப்பிக்கொள்வது மேலானது. சூரியனுக்குக் கீழே இன்னும் அர்த்தமற்ற ஒன்றை நான் கண்டேன்: தனிமையாய் இருக்கும் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு மகனோ, சகோதரனோ இல்லை. அப்படியிருந்தும் அவனுடைய கடும் உழைப்பிற்கோ முடிவே இருக்கவில்லை. ஆனாலும் அவன் கண்கள் அவனுடைய செல்வத்தில் திருப்தியடையவுமில்லை. அவன், “நான் யாருக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறேன்; ஏன் நான் என் வாழ்வை சந்தோஷமாய் அனுபவியாதிருக்கிறேன்” என்று கேட்டான். இதுவும் அர்த்தமற்றதும், அவலத்துக்குரிய ஒரு நிலையாயும் இருக்கிறது.

பிரசங்கி 4:4-8 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்