“வா, இப்பொழுது நன்மையானது என்னவென்று கண்டுபிடிக்கும்படி இன்பத்தை அனுபவித்துச் சோதித்துப் பார்ப்போம்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் அதுவும் அர்த்தமற்றது என்று நிரூபிக்கப்பட்டது. சிரிப்பு மூடத்தனமானது என்றும், இன்பம் என்ன பலனைக் கொடுக்கிறது என்றும் நான் சொன்னேன். திராட்சை இரசத்தினால் என்னை உற்சாகப்படுத்தியும், மூடத்தனமாயும் நடந்து பார்த்தேன்; அப்பொழுது இன்னும் என் மனமே ஞானத்தினால் எனக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தது. மனிதர் தங்களுடைய வாழ்வின் குறுகிய நாட்களில், வானத்தின் கீழே செய்யப் பயனுள்ளது என்ன என்று பார்க்க விரும்பினேன். பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினேன். அழகிய சோலைகளையும் பூந்தோட்டங்களையும் எனக்காக உண்டாக்கி, எல்லாவித பழமரங்களையும் அதில் நட்டேன். செழித்து வளர்ந்த தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்குக் குளங்களைக் கட்டினேன். ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வாங்கினேன்; மேலும் வீட்டில் பிறந்த அடிமைகளையும் வைத்திருந்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும், அதிகமான ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் எனக்கிருந்தன. நான் தங்கத்தையும் வெள்ளியையும் எனக்கெனக் குவித்தேன்; அரசர்களிடமிருந்தும் மாகாணங்களிலிருந்தும் கிடைத்த செல்வங்களைச் சேர்த்தேன். பாடகர்களும் பாடகிகளும் எனக்கிருந்தனர்; மனித இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவர்களான பல பெண்களையும் வைத்திருந்தேன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் மிகப்பெரியவனானேன். இவை எல்லாவற்றின் மத்தியிலும் என் ஞானம் என்னைவிட்டு நீங்காமல் இருந்தது. என் கண்கள் ஆசை வைத்த எதையும் நான் பெறாமல் விடவில்லை; என் இருதயத்துக்கு எந்த இன்பங்களையும் நான் கொடுக்க மறுக்கவில்லை. என் எல்லா வேலையிலும் என் இருதயம் மகிழ்ந்தது, என் எல்லா உழைப்புக்குமான வெகுமதி இதுவே. அப்படியிருந்தும் என் கைகள் செய்த எல்லாவற்றையும், அவற்றை அடைய நான் பட்ட பிரசாயத்தையும் பார்த்தபோது, இவை யாவும் அர்த்தமற்றவையாகவே இருந்தன, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் பிரசங்கி 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: பிரசங்கி 2:1-11
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்