உபாகமம் 6:1-12

உபாகமம் 6:1-12 TCV

யோர்தானைக் கடந்து நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளும், விதிமுறைகளும், சட்டங்களும் இவையே. இவற்றை உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் இறைவனாகிய யெகோவா என்னை நியமித்திருக்கிறார். நான் உங்களுக்குக், கொடுக்கிற அவருடைய இந்த விதிமுறைகளையும் கட்டளைகளையும் நீங்கள் கைக்கொண்டால், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அவர்களுக்குப்பின் அவர்களின் பிள்ளைகளும் வாழும் காலமெல்லாம் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்து நடப்பீர்கள். நீங்கள் நீடித்த வாழ்வையும் அனுபவிப்பீர்கள். இஸ்ரயேலே, கேளுங்கள், கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். கீழ்ப்படிந்தால் நீங்கள் நலமாயிருப்பீர்கள்; பாலும் தேனும் வழிந்தோடுகிற நாட்டில், உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குக்கொடுத்தபடியே மிகுதியாய்ப் பெருகுவீர்கள். இஸ்ரயேலே கேள்: யெகோவாவே நம்முடைய இறைவன், அவர் ஒருவர் மட்டுமே யெகோவா. உன் இறைவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து. இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் உங்கள் இருதயத்தில் இருக்கவேண்டும். அவற்றை உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியச்செய்யவேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், வெளியே தெருவில் போகும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும் அவற்றைக்குறித்துப் பேசிக்கொண்டிருங்கள். அவற்றை உங்கள் கைகளிலும், நெற்றிகளிலும் அடையாளச் சின்னங்களாகக் கட்டிக்கொள்ளுங்கள். அவைகளை உங்கள் வீட்டுக் கதவு நிலைகளிலும், உங்கள் வாசல்களிலும் எழுதிவையுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்கு, உங்களை அங்கு கொண்டுவருவார். அந்த நாட்டில் நீங்கள் கட்டாத விசாலமான, செழிப்பான பட்டணங்கள் இருக்கின்றன. நீங்கள் சேகரிக்காத பல வகையான நல்ல பொருட்களால் நிறைந்த வீடுகளும், நீங்கள் வெட்டாத கிணறுகளும், நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களும் ஒலிவத்தோப்புகளும் இருக்கின்றன. நீங்கள் அங்கு சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள். அப்பொழுது நீங்கள் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.