தானியேல் 7:7-14

தானியேல் 7:7-14 TCV

அந்த இரவிலே, எனது தரிசனத்தில் எனக்கு முன்பாக நான்காவது மிருகத்தையும் கண்டேன். அதுவோ திகிலூட்டுவதாகவும், பயங்கரமானதாகவும், மிகவும் வல்லமையுடையதாகவும் இருந்தது. பெரிய இரும்புப் பற்கள் அதற்கு இருந்தன. அது தனக்கு அகப்பட்டதை நசுக்கி சின்னாபின்னமாக்கி விழுங்கியது. எஞ்சியதைத் தனது கால்களால் மிதித்துப்போட்டது. அது முன்பு காணப்பட்ட மிருகங்களையும்விட, வித்தியாசமானதாய் இருந்தது. அதற்கு பத்து கொம்புகள் இருந்தன. நான் அந்தக் கொம்புகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில், அங்கே எனக்கு முன்பாக அவற்றிற்கு நடுவில் வேறொரு சிறிய கொம்பு எழும்பிற்று. அப்பொழுது முன்பிருந்த கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டன. அந்தச் சிறிய கொம்பில் மனிதனுடைய கண்களைப்போன்ற கண்களும், பெருமையாய் பேசும் வாயும் இருந்தன. நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில், அந்த இடத்தில் அரியணைகள் அமைக்கப்பட்டன. அதன் நடுவில் பூர்வீகத்திலுள்ளவர் அமர்ந்திருந்தார். அவரது உடை உறைந்த பனியைப்போல் வெண்மையாயிருந்தது. அவருடைய தலைமயிர் தூய்மையான பஞ்சைப்போல் வெண்மையாய் இருந்தது. அவரது அரியணை கொழுந்துவிட்டெரிகிற நெருப்பினால் சுடர் விட்டுக்கொண்டிருந்தது. அதன் சக்கரங்கள் கொழுந்து விட்டெரிந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பு ஆறு ஒன்று எழும்பி ஓடிக்கொண்டிருந்தது. ஆயிரம் ஆயிரமானவர்கள் அவருக்குப் பணிபுரிந்தார்கள். கோடிக்கணக்கானோர் அவர்முன் நின்றார்கள். நீதிமன்றம் கூட்டப்பட்டது. புத்தகங்கள் திறக்கப்பட்டன. “அதன்பின் அந்த சிறிய கொம்பு பெருமையான வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்ததால், நான் தொடர்ந்து கவனித்துப் பார்த்தேன். அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டு, அதன் உடல் அழிக்கப்பட்டு நெருப்பு ஜூவாலையில் எறியப்படும்வரையும், நான் பார்த்துக்கொண்டிருந்தேன். மற்ற மிருகங்களிடமிருந்தோ அவற்றின் அதிகாரம் பறிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவை குறிப்பிட்ட காலத்திற்கு வாழும்படி அனுமதிக்கப்பட்டன. “அந்த இரவிலே எனது தரிசனத்தில் நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அங்கே எனக்கு முன்பாக வானத்தின் மேகங்களுடன் மனித குமாரனைப்போன்ற ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவர் பூர்வீகத்தில் உள்ளவரிடத்தின் அருகே வர, அவருக்கு முன்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அதிகாரமும், மகிமையும், ஆளுமையும், வல்லமையும் கொடுக்கப்பட்டன. எல்லா மக்களும், நாடுகளும், பல்வேறு மொழிகளைப் பேசும் மனிதரும் அவரை வழிபட்டனர். அவரது ஆளுகை ஒழிந்துபோகாத ஆளுகை, அது என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது அரசு ஒருபோதும் அழிந்துபோகாது.