தானியேல் 6:19-27

தானியேல் 6:19-27 TCV

மறுநாள் அதிகாலையிலேயே அரசன் எழுந்து சிங்கத்தின் குகைக்கு விரைவாகப் போனான். அரசன் குகையின் அருகில் வந்ததும் துயரமான குரலில் தானியேலைக் கூப்பிட்டு, “தானியேலே, வாழும் இறைவனின் அடியவனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற இறைவன் சிங்கங்களிடத்திலிருந்து உன்னைத் தப்புவிக்க வல்லவராய் இருந்தாரோ?” என்று தானியேலைக் கேட்டான். அதற்கு தானியேல், “அரசே, நீர் நீடூழி வாழ்க. எனது இறைவன் தனது தூதனை அனுப்பினார், அவர் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கொன்றும் செய்யவில்லை. ஏனெனில் நான் இறைவனின் முன்னிலையில் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன். அரசே, நான் உமக்கு முன்னிலையிலும், ஒருபொழுதும் எந்தப் பிழையும் செய்யவில்லை என்றான்.” அப்பொழுது அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, தானியேலைச் சிங்கத்தின் குகையிலிருந்து தூக்கி எடுக்கும்படி உத்தரவிட்டான். தானியேல் சிங்கக் குகையிலிருந்து தூக்கி எடுக்கப்பட்டபோது, அவனில் எவ்வித காயமும் காணப்படவில்லை. ஏனெனில், அவன் தனது இறைவனில் நம்பிக்கையாயிருந்தான். பின்பு அரசனின் கட்டளைப்படியே தானியேலைக் குற்றஞ்சாட்டிய மனிதர்களும், அவர்களுடைய மனைவிகளும், பிள்ளைகளும் கொண்டுவரப்பட்டு சிங்கத்தின் குகையில் போடப்பட்டார்கள். ஆனால் அவர்கள் குகையின் தரையில் விழும் முன்னரே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, கிழித்து அவர்கள் எலும்புகளை நொறுக்கிப்போட்டன. அப்பொழுது தரியு அரசன், எல்லா மக்களுக்கும், நாடுகளுக்கும், பல்வேறு நாடெங்கும் மொழிகளைப் பேசுபவர்களுக்கும் எழுதுகிறதாவது: “நீங்கள் மிகச் செழிப்புடன் வாழ்வீர்களாக. “எனது ஆட்சிக்குட்பட்டிருக்கும் எல்லா பகுதிகளிலுமுள்ள மக்கள் தானியேலின் இறைவனுக்குப் பயந்து அவரையே கனப்படுத்தவேண்டும். “ஏனெனில் வாழும் இறைவன் அவரே. அவர் என்றென்றும் நிலைத்திருக்கிறார். அவருடைய அரசு அழிந்துபோகாது. அவரது ஆளுகை முடிவில்லாதது. அவர் தப்புவிக்கிறார், அவர் காப்பாற்றுகிறார். அவரே வானத்திலும் பூமியிலும், அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்கிறார். அவரே வலிமைமிக்க சிங்கங்களிடமிருந்து தானியேலைத் தப்புவித்தார்.”