அப்பொழுது பெல்தெஷாத்சார் என அழைக்கப்படும் தானியேல், சிறிது நேரம் மிகவும் குழப்பமடைந்து நின்றான். அவனுடைய சிந்தனைகள் அவனுக்குத் திகிலைக் கொடுத்தது. அதைக்கண்ட அரசன், “பெல்தெஷாத்சாரே, இக்கனவினாலோ, அதன் விளக்கத்தினாலோ நீ கலங்கவேண்டாம் என்றான்.”
அதற்கு பெல்தெஷாத்சார், “என் தலைவனே இக்கனவு உமது பகைவர்களுக்கும், அதன் விளக்கம் உமது எதிரிகளுக்கும் பலித்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்குமே! நீர் ஒரு மரத்தைக் கண்டீரே; அது விசாலமானதாயும், வலுவுள்ளதாயும் வளர்ந்தது. அதன் நுனிக்கிளை உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் காணக்கூடியதாய் ஆகாயத்தைத் தொட்டது. அதோடு இலைகள் அழகானதாயும், அதில் பழங்கள் நிறைந்தும் காணப்பட்டது. அவை எல்லோருக்கும் போதுமான உணவாயும் இருந்தன. வெளியின் மிருகங்களுக்கு அம்மரம் புகலிடம் கொடுத்தது. அதன் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் கூடுகட்ட இடமும் இருந்தது. அரசே! நீரே அந்த மரம். நீர் பெரியவராயும், வல்லமையுடையவராயும் ஆகியிருக்கிறீர். உமது மேன்மை ஆகாயத்தைத் தொடும் வரைக்கும் வளர்ந்திருக்கிறது. உம்முடைய ஆளுகை பூமியின் தூரமான பகுதி வரைக்கும் விரிவடைந்திருக்கிறது.
“அரசே! பரலோகத்திலிருந்து பரிசுத்த தூதுவன் ஒருவன் இறங்கி வருவதையும் கண்டீர். அவன், ‘இந்த மரத்தை வெட்டி வீழ்த்தி அழித்துப்போடுங்கள்; ஆனால் அதன் அடிமரத்தை இரும்பினாலும், வெண்கலத்தினாலும் கட்டி, புற்தரையில் இருக்கும்படி விடுங்கள். அதன் வேர்களைத் தரையில் விட்டுவிடுங்கள். அவன் ஆகாயத்துப் பனியில் நனையட்டும். அப்படி ஏழு காலங்கள் கடந்துபோகும் வரைக்கும் காட்டு மிருகங்களைப்போல் வாழட்டும் என்றும் சொல்லக்கேட்டீரே.’
“அரசே, விளக்கம் இதுவே; அரசனாகிய என் தலைவருக்கு எதிராக மகா உன்னதமானவர் பிறப்பித்த கட்டளை இதுவே: நீர் மக்கள் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர். ஆகாயத்துப் பனியில் நனைந்து மாட்டைப்போல் புல்லைத் தின்பீர். மகா உன்னதமானவர் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர் விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார் என்பதையும் நீர் ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் உம்மைக் கடந்துபோகும். ஆயினும், ‘வேர்களோடு அடிமரத்தை விட்டு வை’ என்ற கட்டளையின் விளக்கம் இதுவே: பரலோகமே ஆளுகை செய்கிறது என்பதை நீர் ஏற்றுக்கொள்ளும்போது, உமது அரசு உமக்கே திரும்பிக் கொடுக்கப்படும். ஆகையால் அரசே, தயவுசெய்து நான் சொல்லும் ஆலோசனையைக் கேளும். நியாயமானவற்றைச் செய்து உமது பாவங்களையும், ஒடுக்கப்பட்டோருக்கு இரக்கம் காட்டி உமது கொடுமைகளையும் அகற்றிவிடும். அதனால் ஒருவேளை உமது வளமான வாழ்வு நீடிக்கலாம் என்றான்.”
இவையெல்லாம் நேபுகாத்நேச்சார் அரசனுக்கு நிறைவேறியது. பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்பு ஒரு நாள் அரசன், பாபிலோனின் அரச அரண்மனை மொட்டைமாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அப்பொழுது அரசன், “நான் கட்டிய மாபெரும் பாபிலோன் இது அல்லவா! எனது மிகுந்த வல்லமையினால் எனது மாட்சிமையின் மகிமைக்காக எனது அரச குடியிருப்பாக இதைக் கட்டினேன், என தனக்குள் சொல்லிக்கொண்டான்.”
இந்த வார்த்தைகள் அவனுடைய உதட்டில் இன்னும் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “நேபுகாத்நேச்சார் அரசனே, உனக்குத் தீர்ப்பிடப்பட்டது இதுவே: உனது அரச அதிகாரம் உன்னிடமிருந்து இப்பொழுதே பறிக்கப்பட்டுவிடும். நீ மனிதரிடமிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வாய். மாடுகளைப்போல் புல்லைத் தின்பாய். மகா உன்னதமானவர், மனிதர்களின் அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், தாம் விரும்பியவர்களுக்கு அரசாட்சியைக் கொடுப்பவர் என்பதையும் நீ ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும் என அச்சத்தம் சொல்வதைக் கேட்டான்.”
உடனடியாக நேபுகாத்நேச்சாரைப் பற்றிச் சொல்லப்பட்டது நிறைவேறியது. அவன் மனிதரிலிருந்து துரத்தப்பட்டு, மாடுகளைப்போல் புல்லைத் தின்றான். அவனுடைய உடல் ஆகாயத்துப் பனியில் நனைந்து அவனுடைய தலைமயிர் கழுகுகளின் இறகுகளைப்போல் வளர்ந்தது. அவனுடைய நகங்கள் பறவையின் நகங்களைப்போல் வளர்ந்தது.