தானியேல் 3:19-25

தானியேல் 3:19-25 TCV

அப்பொழுது நேபுகாத்நேச்சார் அரசன், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர்மீது கடுங்கோபம் கொண்டான். அவர்களைப்பற்றி அவன் கொண்டிருந்த மனப்பாங்கு மாற்றமடைந்தது. அவன் அந்த சூளையை வழக்கத்தைவிட ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளையிட்டான். பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைக் கட்டி, பற்றியெரிகிற நெருப்புச்சூளையிலே போடும்படி தனது படையிலுள்ள வலிமையான போர் வீரருக்குக் கட்டளையிட்டான். அப்படியே இந்த மனிதர் தாங்கள் அணிந்திருந்த மேலுடைகளோடும், காற்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்றும் உடைகளோடும் கட்டப்பட்டு, பற்றியெரியும் நெருப்புச்சூளையினுள் எறியப்பட்டார்கள். அரசனின் கட்டளை அவசரமானதாயிருந்ததாலும் சூளையோ மிகவும் சூடாயிருந்ததாலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைக் கொண்டுசென்ற வீரர்களையோ நெருப்பு ஜூவாலை எரித்துப்போட்டது. அதேவேளை இம்மூவரும் உறுதியாகக் கட்டுண்டவர்களாய் பற்றியெரியும் நெருப்புச்சூளைக்குள் விழுந்தார்கள். அப்பொழுது அதைப் பார்த்துக்கொண்டிருந்த நேபுகாத்நேச்சார் அரசன் ஆச்சரியத்துடன் துள்ளி எழுந்து, தனது ஆலோசகர்களிடம், “நாம் மூவரைத்தானே கட்டி நெருப்புச்சூளையில் போட்டோம் எனக் கேட்டான்?” அதற்கு அவர்கள், “நிச்சயமாக! ஆம் அரசே!” என்றார்கள். அவன், “இதோ பாருங்கள், நான்கு மனிதர்கள் நெருப்பிலே நடந்து திரிகிறதைக் காண்கிறேன். அவர்கள் கட்டப்படாதவர்களாயும், எதுவித சேதமும் இன்றியும் இருக்கிறார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கிறானே என்றான்.”

தானியேல் 3:19-25 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்