நீர் கவனித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பாறாங்கல் வெட்டியெடுக்கப்பட்டது. ஆயினும் மனித கைகளினால் அல்ல; அந்தக் கல், இரும்பினாலும் களிமண்ணினாலும் செய்யப்பட்டிருந்த அந்தச் சிலையின் பாதங்களில் மோதி அதை நொறுக்கிப்போட்டது. அதே வேளையிலே, அதில் இருந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், தங்கமும் துண்டுகளாக உடைக்கப்பட்டு, கோடைகாலத்தில் சூடடிக்கும் களத்திலிருக்கும் பதரைப்போலாகியது. காற்று அவற்றை இருந்த இடமே தெரியாதபடி வாரிக்கொண்டு போனது. ஆனால் சிலையை மோதிய அந்த பாறாங்கல்லோ, மிகப்பெரிய மலையாகி பூமி முழுவதையும் நிரப்பிற்று.
“கனவு இதுவே. இதன் விளக்கத்தையும் இப்பொழுது நாம் அரசருக்குத் தெரிவிப்போம். அரசே நீர் அரசர்களுக்கெல்லாம் அரசராய் இருக்கிறீர். பரலோகத்தின் இறைவன் உமக்கு ஆளுகையையும், அதிகாரத்தையும், வல்லமையையும், மகிமையையும் கொடுத்திருக்கிறார். மனுக்குலத்தையும், வெளியின் மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கைகளில் தந்திருக்கிறார். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், எல்லோருக்கும் மேலாக ஆளுநராக அவர் உம்மையே ஏற்படுத்தியிருக்கிறார். தங்கத்தினாலான அந்தத் தலை நீரே.
“உமக்குப்பின் உம்முடைய ஆட்சியைவிட தரம் குறைந்த ஒரு அரசு தோன்றும். அதற்கு அடுத்ததாக, வெண்கலத்தினாலான மூன்றாவது அரசு உலகம் முழுவதையும் ஆட்சிசெய்யும். கடைசியாக, இரும்பைப்போன்ற பலமான ஒரு நான்காம் அரசு தோன்றும். இரும்பு எல்லாவற்றையும் நொறுக்குவதால் இவ்வரசும் இரும்பு பொருட்களைத் துண்டு துண்டாக்குவதுபோல், மற்ற அரசுகளையும் துண்டுதுண்டாக நொறுக்கிப்போடும். பாதங்களும், கால் விரல்களும் பாதிகளிமண்ணும், பாதி இரும்புமாய் இருக்கக் கண்டதுபோலவே இதுவும் ஒரு பிளவுபட்ட அரசாயிருக்கும். ஆயினும், களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே, இரும்பினுடைய வலிமையில் கொஞ்சம் அதிலும் இருக்கும். கால்விரல்கள் பாதி இரும்பும், பாதி களிமண்ணுமாயிருந்தது போலவே, அந்த அரசும் பாதி பலமுடையதாயும், பாதி பலமற்றதாயும் இருக்கும். இரும்பு களிமண்ணோடே கலந்திருக்க நீர் கண்டதுபோலவே, மக்கள் மற்றவர்களோடு கலப்பினமாக இருப்பார்கள். ஆனாலும் களிமண்ணோடு இரும்பு கலவாததுபோலவே, அவர்களும் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.