தானியேல் 2:14-33

தானியேல் 2:14-33 TCV

பாபிலோனின் ஞானிகளைக் கொலை செய்யும்படி, அரச காவல் தளபதியான ஆரியோக் போகையில், தானியேல் அவனுடன் ஞானத்தோடும், சாதுரியத்தோடும் பேசினான். அவன் அரச அதிகாரியிடம், “அரசனால் ஏன் இவ்வளவு கடுமையான ஆணை பிறப்பிக்கப்பட்டது?” எனக் கேட்டான். அப்பொழுது ஆரியோக், காரியத்தை தானியேலுக்கு விளக்கிக் கூறினான். அதனைக் கேட்டதும் தானியேல் அரசனிடம் உள்ளே போய் கனவையும், அதன் விளக்கத்தையும் சொல்லுவதற்கு அவனுக்கு ஒரு காலக்கெடு தரும்படிக் கேட்டான். பின்பு தானியேல் தன் வீட்டுக்குத் திரும்பிவந்து, நடந்தவற்றைத் தன் நண்பர்களான அனனியா, மீஷாயேல், அசரியா ஆகியோருக்கு விளக்கிக் கூறினான். பாபிலோனின் மற்ற ஞானிகளுடன், தானியேலும் தனது நண்பர்களும் கொலைசெய்யப்படாதிருப்பதற்கு, இந்த மறைபொருளை வெளிப்படுத்தும்படி பரலோகத்தின் இறைவனிடம் இரக்கத்துக்காக மன்றாடுங்கள் என அவர்களைத் தூண்டினான். இரவுவேளையில் ஒரு தரிசனத்தின் மூலமாகத் தானியேலுக்கு அந்த மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல் பரலோகத்தின் இறைவனைத் துதித்து, அவன் சொன்னதாவது: “இறைவனின் பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; ஞானமும், வல்லமையும் அவருடையவையே.” காலங்களையும் பருவகாலங்களையும் மாற்றுகிறார் அவரே; அரசர்களை விலக்கி, மாற்று அரசர்களை ஏற்படுத்துகிறவர் அவரே. அவரே ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுப்பவர் அவரே. ஆழமானதும் மறைவானதுமானவற்றை வெளிப்படுத்துகிறவர் அவரே; இருளில் உள்ளதை அவர் அறிகிறார், ஒளியும் அவருடன் தங்கியிருக்கிறது. என் முற்பிதாக்களின் இறைவனே, உமக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதிக்கிறேன். நீர் எனக்கு ஞானமும், வல்லமையும் தந்திருக்கிறீர். “நாங்கள் உம்மிடம் கேட்டதை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். அரசனின் கனவை நீர் எங்களுக்குத் தெரிவித்திருக்கிறீர்.” பாபிலோனின் ஞானிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி, அரசனால் நியமிக்கப்பட்ட ஆரியோகிடம் தானியேல் போய், “நீர் பாபிலோன் ஞானிகளை மரண தண்டனைக்குள்ளாக்க வேண்டாம். என்னை அரசனிடம் அழைத்துச் செல்லும். அரசனுடைய கனவின் விளக்கத்தை நான் அவருக்குச் சொல்வேன் என்றான்.” ஆரியோக் உடனே தானியேலை அரசனிடம் அழைத்துச்சென்று, “உமது கனவுக்கான விளக்கத்தைச் சொல்லக்கூடிய ஒருவனை, யூதா நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் கண்டுபிடித்தேன் என்றான்.” அப்பொழுது அரசன், பெல்தெஷாத்சார் என்று அழைக்கப்பட்ட தானியேலிடம், “எனது கனவில் எதைக் கண்டேன் என்று சொல்லவும், அதன் விளக்கத்தைக் கூறவும் உன்னால் முடியுமா?” என்று கேட்டான். அதற்குத் தானியேல் அரசனிடம், “அரசர் வெளிப்படுத்துபடி கேட்டிருக்கும் இந்த மறைபொருளை அரசருக்கு விளக்கிக்கூற எந்த ஞானியாலோ, மந்திரவாதியாலோ, மாந்திரீகனாலோ, குறிசொல்கிறவர்களாலோ முடியாது. ஆனால் அரசே, மறைபொருட்களை வெளிப்படுத்துகிற ஒரு இறைவன் பரலோகத்தில் இருக்கிறார். வரப்போகும் நாட்களில் நிகழப்போவதை அவரே நேபுகாத்நேச்சார் அரசருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நீர் படுக்கையில் படுத்திருந்தபோது, நீர் கண்ட கனவும், உமது மனதைக் கடந்துசென்ற தரிசனங்களும் இவையே: “அரசே, நீர் படுத்திருக்கையில் வரப்போகும் காரியங்களை உமது மனம் சிந்திக்கத் தொடங்கியது. அந்நேரத்தில் மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர், இனி நிகழப்போவது என்ன என்பதை உமக்குக் காண்பித்தார். என்னைப் பொறுத்தவரையில் வாழ்கின்ற மற்ற மனிதர்களைவிட நான் மிகுந்த ஞானமுள்ளவன் என்பதால் எனக்கு இந்தக் கனவின் மறைபொருள் வெளிப்படுத்தப்படவில்லை; அரசராகிய நீர் அதற்குரிய விளக்கத்தை அறிந்துகொள்ளும்படியும், உமது மனதில் கடந்துசென்றவற்றை நீர் விளங்கிக்கொள்ளும்படியுமே இந்த கனவின் மறைபொருள் எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. “அரசே, நீர் பார்த்தபோது ஒரு பெரிய சிலை உமக்கு முன்பாக நிற்பதைக் கண்டீர். அது மிகப்பெரியதாயும், மினுங்கிக்கொண்டும் இருந்தது. அது தோற்றத்தில் பயங்கரமானதாயும் இருந்தது. அச்சிலையின் தலை சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தது. மார்பும், புயங்களும் வெள்ளியினாலும், வயிறும் தொடைகளும், வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருந்தன. அதன் கால்கள் இரும்பினாலும், பாதங்களின் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி சுடப்பட்ட களிமண்ணினாலும் செய்யப்பட்டிருப்பதையும் கண்டீர்.