தானியேல் 10:15-21

தானியேல் 10:15-21 TCV

அவன் என்னிடம் சொல்லும்போது, நான் பேச முடியாதவனாய் முகங்குப்புற விழுந்து வணங்கினேன். உடனே மனிதனைப் போன்ற ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். அப்பொழுது நான் என் வாயைத் திறந்து பேசத் தொடங்கினேன். நான் எனக்குமுன் நின்றவரைப் பார்த்து, “ஐயா, இந்தத் தரிசனத்தால் நான் வேதனையில் மூழ்கி, எதுவும் செய்யமுடியாதவனாய் இருக்கிறேன். ஐயா, உமது அடியவனாகிய நான் உம்மோடு எப்படிப் பேசலாம்? எனக்குப் பெலன் இல்லை. என்னால் மூச்சுவிடவும் முடியவில்லை என்றேன்.” திரும்பவும் மனிதனைப்போல் காணப்பட்ட அவர் என்னைத் தொட்டு எனக்குப் பெலன்தந்தார். “மிக மதிப்பிற்குரிய மனிதனே, பயப்படாதே. உன்னுடன் சமாதானம் இருப்பதாக. இப்பொழுது திடன்கொண்டு தைரியமாயிரு என்றார்.” என்னுடன் அவர் அப்படிப் பேசியபோது, நான் பெலன்கொண்டு, “பேசும் ஐயா, நீர் எனக்கு பெலனைக் கொடுத்திருக்கிறீர்” என்று சொன்னேன். தொடர்ந்து அவர் என்னிடம், “நான் ஏன் இங்கு வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் மிக விரைவாக பெர்சிய இளவரசனுக்கு எதிராகத் திரும்பவும் சண்டைக்குப் போகப்போகிறேன். நான் போகிறபோது கிரேக்க இளவரசனும் என்னை எதிர்த்து வருவான். ஆனால் முதலில் நான் உனக்கு உண்மையின் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பதைச் சொல்கிறேன். உங்கள் இளவரசன் மிகாயேலைத் தவிர அந்த இளவரசர்களை எதிர்க்க வேறு ஒருவரும் எனக்கு உதவிசெய்யவில்லை.