ஆமோஸ் 5:10-24

ஆமோஸ் 5:10-24 TCV

இஸ்ரயேலின் நீங்கள் நீதிமன்றத்திற்கு குற்றவாளியைக் கொண்டுவருகிறவனை வெறுக்கிறீர்கள், உண்மை சொல்கிறவனை உதாசீனம் செய்கிறீர்கள். ஏழையை மிதித்து, உங்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி அவனைப் பலவந்தப்படுத்துகிறீர்கள். ஆகையால் கல்லினால் மாளிகைகளைக் கட்டியும், அதில் வாழமாட்டீர்கள், செழிப்பான திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினாலும் அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கமாட்டீர்கள். உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் எவ்வளவு கொடியதென்றும் நான் அறிவேன். நீங்கள் நீதிமான்களை ஒடுக்கி, அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகிறீர்கள். நீதிமன்றத்தில் ஏழைக்கு நீதிவழங்க மறுக்கிறீர்கள். ஆகையால் அப்படிப்பட்ட காலங்களில் விவேகமுள்ளவன் மவுனமாய் இருக்கவேண்டும். ஏனெனில் காலம் மிகக் கொடியதாய் இருக்கிறது. தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். சேனைகளின் இறைவனாகிய யெகோவா உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வதுபோலவே, அவர் உங்களோடிருப்பார். தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். நீதிமன்றங்களில் நீதியை நிலைநிறுத்துங்கள். ஒருவேளை சேனைகளின் இறைவனாகிய யெகோவா, யோசேப்பின் மீதியானவர்மேல் இரக்கம் காட்டுவார். ஆகையால் யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: “எல்லா வீதிகளிலும் புலம்பல் உண்டாயிருக்கும். பொது இடங்களிலெல்லாம் வேதனையின் அழுகுரல் உண்டாயிருக்கும். அழுவதற்காக விவசாயிகளும், புலம்புவதற்காக புலம்பல் வைப்பவர்களும் அழைப்பிக்கப்படுவார்கள். திராட்சைத் தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். ஏனெனில் நான் உங்களைத் தண்டித்துக்கொண்டு கடந்துபோவேன்” என்று யெகோவா சொல்கிறார். யெகோவாவின் நாளை விரும்புகிற உங்களுக்கு ஐயோ கேடு, யெகோவாவின் நாளை ஏன் விரும்புகிறீர்கள்? அந்த நாள் வெளிச்சமாயிராமல் இருளாயிருக்கும். ஒரு சிங்கத்திடமிருந்து தப்பிய மனிதன், கரடியைச் சந்தித்ததுபோல் அது இருக்கும். அவன் தன் வீட்டிற்குள் வந்து சுவரில் கையை ஊன்றியபோது, அவனைப் பாம்பு கடித்ததுபோல் இருக்கும். யெகோவாவின் நாள் வெளிச்சமாயிராமல், இருள் நிறைந்ததாய் இருக்குமல்லவோ? ஒளிக்கீற்று எதுவுமின்றி காரிருளாயிருக்குமல்லவோ? உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, உதாசீனம் செய்கிறேன்; உங்கள் சபைக் கூட்டங்களை என்னால் சகிக்க முடியவில்லை. தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும் நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும், அவற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். சிறப்பான சமாதான காணிக்கையை நீங்கள் கொண்டுவந்தாலும், அவற்றைப் பார்க்கவும் மாட்டேன். உங்கள் பாடல்களின் சத்தத்தோடு அகன்றுபோங்கள். உங்கள் பாடல்களின் இசையை நான் கேட்கமாட்டேன். அவற்றிற்குப் பதிலாக நீதி ஆற்றைப்போல் புரண்டோடட்டும். நீதி என்றும் வற்றாத நீரோடையைப்போல் ஓடட்டும்.